Financial assistance with Rs 1 lakh grant for agriculture graduates to start business: Perambalur Collector Information!
பெரம்பலூர் கலெக்டர் வெங்கடபிரியா விடுத்துள்ள செய்திக் குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 30 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2022-23ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த கிராம பஞ்சாயத்துக்களில், வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல், இளநிலை பட்டப்பிரிவில் சான்று பெற்ற இளம் தொழில் முனைவோருக்கு, அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு வேளாண் பட்டதாரி இளைஞர்களுக்கு 25 சதவீதம் அதிகபட்ச நிதி உதவியாக ரூ.1 லட்சம் பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும்.
இந்த திட்டத்தின் கீழ் மானிய உதவி பெற விரும்பும் வேளாண்மை பட்டதாரிகளின் வயது 21-ல் இருந்து – 40-க்குள் இருக்க வேண்டும். வேளாண்மை தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பிரிவில் குறைந்தபட்சம் இளநிலையில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கக்கூடாது. விண்ணப்பதாரர் கணினித்திறன் பெற்றிருக்க வேண்டும். ஒரு குடும்பத்திற்கு ஒரு வேளாண் பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதி உடையவர் ஆவார். வருகிற 15-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இத்திட்டமானது பிரதம மந்திரியின் உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME). வேளாண் உட்கட்டமைப்பு நிதியின் கீழ் அனுமதிக்கக்கூடிய திட்டங்களின் அடிப்படையில் சுய தொழில்கள் தொடங்கலாம். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 25 சதவீத மானியமாக அதிகபட்சமாக ரூ.1 இலட்சம் வரை பின்னேற்பு மூலதன மானியமாக வழங்கப்படும்.
எனவே தகுதியுடைய தொழில் தொடங்கவிருப்பமுள்ள வேளாண் பட்டதாரிகள் உரிய விண்ணப்பத்துடன் விரிவான திட்ட அறிக்கையுடன் கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் 26.08.2022-க்குள் அந்தந்த பகுதி வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார்.