First skill development training center for construction workers to be set up in Perambalur: Welfare Board Chairman Pon. Kumar

file Copy

பெரம்பலூரில் நடந்த கட்டுமானம் மற்றும் மனைத்தொழில் கூட்டமைப்பின் மாநில செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்ட, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியத் தலைவர் பொன். குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தாவது:

கடந்த அதிமுக ஆட்சியில் கட்டுமானம், ரியல் எஸ்டேட் தொழில் நலிவடைந்ததால், தமிழகத்தில் கடும் பொருளாதார பின்னடைவு ஏற்பட்டது. தற்போது, தமிழக முதல்வரின் முயற்சியால் பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில் மீண்டும் வளர்ச்சியடைய வாய்ப்பு உள்ளது.
இத் துறைக்குத் தனியாக மத்திய, மாநில அரசுகள் அமைச்சரை நியமிக்க வேண்டும்.

கட்டுமானப் பொருள்களின் விலை உயர்வை நிரந்தரமாகக் கண்காணிப்பதற்கு பலதரப்பட்ட நபர்கள் அடங்கிய குழு அமைக்க வேண்டும். பொதுமக்களிடம் அதிக வரவேற்பின் காரணமாக அரசு நிறுவனம் தயாரிக்கும் வலிமை சிமெண்ட்டை விநியோகம் செய்வதில் தட்டுப்பாடு உள்ளது. விரைவில், புதிய யூனிட் அமைத்து அரசு சிமெண்ட் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டில் விவசாயத்துக்கு அடுத்து பெரிய தொழிலாக இருக்கும் கட்டுமானத் தொழிலை ஊக்கப்படுத்த வேண்டும் என ஆளுநர் பேசியுள்ளார். அவரது பேச்சை வரவேற்கிறோம். கட்டுமானத் தொழிலுக்கு மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள 28 சதவீத ஜி.எஸ்.டி வரியை 5 சதவீதமாக குறைக்க பிரதமரிடம் ஆளுநர் பரிந்துரைக்க வேண்டும்.

2011-இல் கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் 32 லட்சம் தொழிலாளர்கள் உறுப்பினர்களாக இருந்தனர். 2021 -இல் 13 லட்சம் பேர் மட்டுமே இருந்தனர். இடைப்பட்ட காலத்தில் உறுப்பினர் பதிவு மேற்கொள்ளாமல் பலர் விலகிவிட்டனர்.

இந்நிலையில், நான் தலைவராக பொறுப்பேற்ற பிறகு கடந்த ஓராண்டு காலத்தில் 7.5 லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர். அனைத்து நல வாரியங்களிலும் கடந்த ஓராண்டில் 22 லட்சம் பேர் புதிதாக உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். 2011-2020 வரை பல்வேறு உதவிகள் கேட்டு 6 லட்சம் மனுக்கள் வாரியத்துக்கு வந்திருந்தன. இதில், கடந்த ஓராண்டு காலத்தில் 5 லட்சம் பேருக்கு ரூ. 420 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

வட மாநிலத் தொழிலாளர்கள் அனைத்து தொழில்களையும் ஆக்கிரமித்துள்ளனர். அதைத் தடுக்க இயலாது. அவர்கள் கூடுதலாக இங்கு வருவதால் பிரச்னை உருவாக வாய்ப்பு உள்ளது. இதுகுறித்து தமிழக அரசு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்தாலோசித்து உரிய முடிவு எடுக்கப்படும். எம்.சாண்ட் நிறுவனங்களை முறைப்படுத்த தமிழக முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

புதிய கட்டடங்களுக்கு அனுமதி வழங்குவதில் சிக்கல் உள்ளதாகக் கூறப்படுகிறது. அதை சரிசெய்யவும், கட்டுமான அனுமதி வழங்கும் நடவடிக்கையை விரைவுபடுத்தவும் முதலமைச்சரிடம் பேசி உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டுகோள் விடுத்திருக்கிறோம், கட்டுமான தொழிலாளர்களுக்காக தமிழகத்திலேயே முதல் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தை பெரம்பலூரில அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். பேட்டியின்போது மாநில இணை செயலாளர் சிவக்குமார், மாநில செயலாளர்கள் யுவராஜ், கண்ணன், மாநில பொருளாளர் ஜெகதீசன், மண்டல தலைவர் ராஜாராம் ஆகியோர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!