For the first time in Tamil Nadu, the government’s free skill training program—accompanied by a stipend—has been launched at the Ashwin’s Sweets and Snacks factory!

தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் சார்பில், ‘வெற்றி நிச்சயம்’ பயிற்சி திட்டத்தின் கீழ், ‘உணவு மற்றும் பானங்கள் சேவை உதவியாளர்’ பணிக்கான 45 நாட்கள் இலவச திறன் பயிற்சி முகாமை எம்.எல்.ஏ சிவக்குமார் தொடங்கி வைத்தார். நியூ லைப் என்லைட்டன்மென்ட் அண்ட் சேவா டிரஸ்ட் (New Life Enlightenment & Seva Trust) மற்றும் அஸ்வின்ஸ் ஸ்வீட்ஸ் அண்ட் ஸ்நாக்ஸ் (Aswins Sweets and Snacks) நிறுவனம் இணைந்து நடத்தும் இப்பயிற்சி முகாமின் துவக்க விழா பெரம்பலூர் கல்பாடி சாலையில் உள்ள அஸ்வின்ஸ் தலைமை வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சியில் தலைமை உரையாற்றிய அஸ்வின்ஸ் குழும நிர்வாக இயக்குனர் அஸ்வின் கணேசன் பேசியதாவது: ​”இன்றைய சூழலில் பெண்களுக்குப் பாதுகாப்பான வேலைவாய்ப்புகளை வழங்குவதில் ஹோட்டல் மற்றும் விருந்தோம்பல் துறை (Hospitality Industry) மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. இத்துறைக்கு மிக உயரிய படிப்புகளை விட, பணிவன்புடன் பேசும் நல்ல குணமும், வாடிக்கையாளர்களைச் சரியாக உபசரிக்கும் திறனுமே முதன்மையான தேவையாகும்.

​ பலர் ஆங்கிலம் பேசத் தெரியவில்லை என்ற தயக்கத்திலும், தொடக்க காலச் சூழலைச் சமாளிக்க முடியாமலும் வேலைகளைத் தவிர்க்கின்றனர். ஆனால், இந்தப் பயிற்சியின் மூலம் தங்களுக்குத் தேவையான சுயநம்பிக்கையும், நிர்வாகத் திறன்களும் முழுமையாகக் கற்றுத்தரப்படும். அஸ்வின்ஸ் நிறுவனம் இன்று 44 கிளைகளுடன் தமிழ்நாடு முழுவதும் பரந்து விரிந்திருப்பதற்குக் காரணமே இத்துறையில் உள்ள தொடர் வாய்ப்புகள்தான். இந்தத் திறன் பயிற்சியை முழுமையாக முடிப்பவர்களுக்கு உலகளவில் பல்லாயிரக்கணக்கான நல்வாய்ப்புகள் காத்திருக்கின்றன,” பயன்படுத்தி கொள்ளுங்கள் என வாழ்த்திப் பேசினார்.

சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பயிற்சியைத் தொடங்கி வைத்த பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் க.சிவக்குமார் பேசியதாவது: ​”இந்தத் திட்டத்தின் பெயரே ‘வெற்றி நிச்சயம்’ என்று சூட்டப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. ‘வெற்றி நிச்சயம், நல்லதே நடக்கும்’ என்ற வார்த்தைதான் இன்று ஒருவரை தமிழகத்தின் முதலமைச்சராக அரியணையில் அமர வைத்துள்ளது. அதுவே தாரக மந்திரமாக மாறியுள்ளது. ​தமிழகம் முழுவதும் பெண்கள் பெருமளவில் தவெக-விற்கு ஆதரவளித்து வாக்களித்ததன் காரணமாகவே இன்று இத்தகைய ஆட்சி மாற்றம் சாத்தியமாகியுள்ளது. பெண்களின் கைகளில்தான் மிகப்பெரிய சக்தி உள்ளது. இங்கு வந்துள்ளவர்கள், தங்களுக்குக் கிடைக்கும் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்தித் தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும். மேலும், ஒவ்வொரு மாதமும் புதியவர்கள் இதில் இணைய உள்ளதால், உங்களுடைய தோழிகள் மற்றும் உறவினர்களிடமும் இந்தத் திட்டம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி, அவர்களையும் இதில் பங்கேற்கச் செய்ய வேண்டும்,” எனக் கேட்டுக்கொண்டார்.

10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற, 18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்காக நடத்தப்படும் இப்பயிற்சியின் முடிவில், அரசு சான்றிதழுடன் உதவித்தொகையாக ₹12,000/- வழங்கப்படும் என்றும், பயிற்சியை வெற்றிகரமாக முடிப்பவர்கள் விரும்பினால் அஸ்வின்ஸ் நிறுவனத்திலேயே உடனடி வேலைவாய்ப்பு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, அஸ்வின்ஸ் குழுமத்தின் பயிற்சி திறன் மேலாளர் இர்பான் துவக்கவுரையாற்றினார். அஸ்வின்ஸ் குழுமத் தலைவர் செல்வகுமாரி கணேசன் முன்னிலை வகித்தார். உதிரம் அறக்கட்டளையின் சமூக செயல்பாட்டாளர் ம.நாகராஜ் வாழ்த்துரை வழங்கினார். நியூ லைப் என்லைட்டன்மென்ட் அண்ட் சேவா டிரஸ்ட் முதன்மை செயல் அதிகாரி கி. தினகரன் நன்றி கூறினார்.

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!