Freedom fighter Krishnasamy passed away! Tribute to Perambalur Collector and others!

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காரை கிராமத்தை சேர்ந்தவர் சுதந்திர போராட்ட வீரர் தியாகி கிருஷ்ணசாமி. வயது முதிர்வால் இன்று காலமானார். கலெக்டர் வெங்கட பிரியா அவரது உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.

உலக நாடுகளின் சுதந்திர போராட்ட வரலாற்றில் இந்தியாவிற்கு தனி பெருமை உண்டு. இதில் அண்ணல் காந்தியடிகளின் அகிம்சை வழிப் போராட்டத்தில் பங்கேற்க நாடு எங்கும் ஆயிரக்கணக்கானோர் திரண்டு சென்ற போது பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்தும் காந்தி சென்ற பாதையில் பின் தொடர்ந்து அவரோடு அகிம்சை வழியில் நடந்த போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றனர்.

அதேசமயம் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் அவர்கள் ஐஎன்ஏ எனப்படும் இந்திய ராணுவத்தை கட்டமைத்து ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போரிட்டு விரட்ட நினைத்தபோது பெரம்பலூர் மாவட்டத்தில் இருந்து சென்று அவரது படையில் சேர்ந்தவர்தான் தியாகி.கிருஷ்ணசாமி.

22.03.1924 அன்று பிறந்த தியாகி கிருஷ்ணசாமி, ரங்கூன் படை பிரிவில் 16 வயதில் சேர்ந்து பணியாற்றி, கொரில்லா படையில் முக்கிய தலைவராக விளங்கினார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக நடைபெற்ற போரின் காரணமாக மலேசியா மற்றும் பர்மா ஆகிய வெளிநாடுகளில் சிறையில் அடைக்கப்பட்டு இறுதியாக சிங்கப்பூர் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். இவருக்கு மாநில அரசின் மூலம் ஓய்வூதியம் வழங்கப்பட்டு வந்தது.

தியாகி கிருஷ்ணசாமிக்கு வயது 98. இவருக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அவரது உடலுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் மரியாதை செலுத்தும் வகையில் கலெக்டர் வெங்கட பிரியா நேரில் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார் . தியாகிகளுக்கான ஈமச்சடங்கு நிதி தொகை ரூ.5,000த்தினை அவரது குடும்பத்தினர்களிடம் வழங்கினார். பல முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!