Go wherever you can find a job: Idea for youth at Minister Sivasankar Employment Camp!

பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்ட நிர்வாககங்கள், மாவட்ட வேலை வாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையங்கள் சார்பில், தனியார் வேலைவாய்ப்பு முகாமை போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று காலை மேலமாத்துார் ராஜவிக்னேஷ் மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சிக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் வீர ராகவ ராவ் , கலெக்டர்கள் வெங்கட பிரியா (பெரம்பலுார்), ரமண சரஸ்வதி (அரியலூர்) ஆகியோர் தலைமையில் நடந்தது. தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநர் ஜெகதீசன், எம்.எல்.ஏக்கள் பெரம்பலூர் பிரபாகரன், அரியலூர் சின்னப்பா , ஜெயங்கொண்டம் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமை துவக்கி வைத்த அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது: படித்த இளைஞர்கள் அனைவருக்கும் அவரவர் கல்வித்தகுதிக்கேற்ற வேலைவாய்ப்புகளை உருவாக்கித்தர வேண்டும் என்பதே தமிழ்நாடு முதலமைச்சரின் நோக்கம். அதனப்படையில், அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற தனியார் வேலைவாய்ப்புகள் நடத்தப்பட்டு வருகின்றது.

முகாமிற்கு வந்திருக்கின்ற சகோதர சகோதரிகளுக்கு ஒரு வேண்டுகோள். நமக்கு உள்ளுரிலேயே வேலை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தை கைவிட்டு, வேலை எங்கு கிடைத்தாலும் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும். கிடைக்கின்ற இடத்தில் வேலையில் சேர்ந்து உங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

எனது தந்தை சட்டமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் நான் எனது பொறியாளர் படிப்பை முடித்தேன். ஆனாலும், பெங்களுருக்குச் சென்று எனக்கு கிடைத்த பணியை செய்தேன். அதேபோல உலகம் முழுவதும் நம் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் சென்று பணியாற்றி வருகின்றனர். சிங்கப்பூர் மலேசியா சென்று இருக்கும் போது நல்ல பெரிய பெரிய நிறுவனங்களில் முக்கியமான பதவியில் இருக்கிறார்கள். எனவே, இன்று இந்த முகாமில் பங்குபெற்றிருக்கின்ற இளைஞர்கள் பெரிய பணிகளில் பொறுப்பேற்று சமுதாயத்தில் உயர்ந்தவர்களாக உருவாக வேண்டும்.

இன்றைய முகாமில் 202 தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டுள்ளனர். எனவே, உங்கள் கல்வித்தகுதிக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப நிறுவனங்களை தேர்வு செய்து நேர்காணலை எதிர்கொண்டு பணிவாய்ப்பினை பெற வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன். இன்று வேலைவாய்ப்பு பெறுகின்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என தெரிவித்தார்.

இன்றைய முகாமில் 3,641 ஆண்களும், 5,072 பெண்களும் என மொத்தம் 8,713 நபர்கள் கலந்துகொண்டார்கள். இதில் 576 ஆண்களுக்கும், 878 பெண்களுக்கும் என மொத்தம் 1,463 நபர்கள் வேலைவாய்ப்புக்கான பணிநியமன ஆணைகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் வழங்கினார். இந்த முகாமில் இரண்டாம் கட்ட தேர்வுக்கு 876 நபர்கள் தேர்வாகியுள்ளனர். அயல்நாட்டு வேலை வாய்ப்பிற்கு 123 நபர்கள் தேர்வாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியில் திமுக கட்சி பிரமுகர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள், ராஜவிக்னேஷ் பள்ளி நிர்வாகிகள், பணியாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!