If the Special Economic Zone is not started, the lands should be handed back to the farmers: CBI State Secretary R. Mutharasan!

பெரம்பலூரில் சிறப்பு பொருளாதார மண்டலம், தொடங்கவில்லை எனில், நிலங்களை விவசாயிகளிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், பெரம்பலூர் மாவட்ட 8-ஆவது மாநாடு தீரன் நகர் அருகே உள்ள வள்ளாலார் பார்ட்டி ஹாலில் மாவட்டச் செயலர் ஞானசேகரன் தலைமையில் நடந்தது. முன்னாள் மாவட்டச் செயலர் அ. வேணுகோபால் முன்னிலை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் பி. பத்மாவதி, மாநாட்டை தொடக்கி வைத்து பேசினார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநிலச் செயலர் இரா. முத்தரசன், அரசியல் விளக்க உரையாற்றினர். கூட்டத்தில், சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்க விவசாயிகளிமிருந்து கையகப்படுத்தப்பட்ட 3,200 ஏக்கர் நிலத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கும் வகையில் திட்டத்தை தொடங்க வேண்டும். இல்லை என்றால், உரிய விவசாயிகளிடம் நிலத்தை திரும்ப ஒப்படைத்து விவசாயம் செய்ய அனுமதிக்க வேண்டும். திமுக அரசால் ஏற்கனவே அறிவித்தபடி பெரம்பலூரில் அரசு மருத்துவக் கல்லூரி தொடங்க வேண்டும். கடந்த 50 ஆண்டுகளாக தொடர்ந்து வலியுறுத்தப்படும் சின்னமுட்லு நீர்த்தேக்கத் திட்டத்தை தொடங்க வேண்டும்.

கும்பகோணத்திலிருந்து ஜெயங்கொண்டம், அரியலூர், பெரம்பலூர், துறையூர் வழியாக நாமக்கல் வரை புதிய ரயில் வழித்தடம் அமைக்க வேண்டும். கிராமப்புறச் சாலைகளை மேம்படுத்தி, அனைத்து கிராமங்களுக்கும் நகரப் பேருந்துகள் இயக்க வேண்டும். கல்லுடைக்கும் தொழிற்சாலைகளால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படுவதை கருத்தில்கொண்டு, மண் துகள்கள் வெளியேறாதபடி பாதுகாக்க மாவட்ட நிர்வாகமும், சுற்றுச்சூழல் துறையும் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தீரன் நகர் பகுதியில் ஏற்படும் தொடர் விபத்துகளை தடுக்க மேம்பாலம் அமைக்க வேண்டும். கொட்டரை நீர்த்தேக்கத் திட்டத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடந்த 2 ஆண்டுகளாக செயல்படாத வாரச்சந்தையை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்டக் குழு உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஜெயராமன், கலைச்செல்வன், ராமராஜ், தங்கவேல், இளமுருகன், கண்ணதாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, ஒன்றியச் செயலர் முத்துசாமி வரவேற்றார். நகரச் செயலர் ஜெயராமன் நன்றி கூறினார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!