In Diwali Snacks, the use of contamination and hazardous pigments is banned: Namakkal Collector’s
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம்வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தற்போது பண்டிகை காலம் தொடங்கியுள்ள நமது நாட்டில் அனைத்து விதமான விற்பனைகளும் சூடுபிடிக்கத் துவங்கியுள்ளது. முக்கியமாக தீபாவளி மற்றும் கிறுஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்களை மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்த பந்தங்களுக்கு அன்பளிப்பு வழங்குவதும் நமது கலாச்சாரமாக விளங்கி வருகிறது.
தீபாவளி பண்டிகையில் இனிப்பு மற்றும் கார தின்பண்டங்களுக்கு, சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவுப் பாதுகாப்புத் துறையில் பதிவு செய்து லைசென்ஸ் பெற்று பொதுமக்களுக்கு விநியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பாளர்கள், தரமான மூலப்பொருட்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து, பாதுகாப்பான உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.
உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருட்களுக்கு, விவரச்சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிப்பு (அ) பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம் (காலாவதியாகும் காலம்) சைவ மற்றும் அசைவக் குறியீடு ஆகியனவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
உணவுப் பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் வைத்து பொது மக்களுக்கு விற்பனை செய்திடவேண்டும். பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பாவர்கள் உட்பட, அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர சட்டத்தின் கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து லைசென்ஸ் பெற்றுக்கொள்ளவேண்டும்.
பொதுமக்களும், பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.