In the Perambalur, the North-East Monsoon Preliminary Action Plan meeting
பெரம்பலூர் மாவட்டத்தில், வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர்களான மாவட்ட வருவாய் அலுவலர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஆகியோர்களுடனான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சாந்தா தலைமையில் இன்று காலை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில் நடைபெற்றது.
வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையினர் மூலம் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆணையத்தின் உறுப்பினர்களுடன் மாவட்ட ஆட்சியர் விரிவான ஆலோசனை மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து மீட்புப்பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள முதன்மை செயல்பாட்டாளர்களுடானான கூட்டம் நடைபெற்றது.
பின்னர் மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா தெரிவித்துள்ளதாவது:
வடகிழக்குப் பருவமழை காலத்தில் கிராமப்புற பகுதிகளில் தண்ணீர் அதிக அளவில் வருமென்று எதிர்பார்க்கப்படும் பகுதிகளில் உரிய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், திடீரென்று அதிக அளவிலான தண்ணீர் உட்புகும் நிலை ஏற்பட்டால் சம்மந்தப்பட்ட பகுதி மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச்சென்று தங்கவைக்க தேiவாயன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 4 வட்டங்களிலும் மொத்தம் 47 கிராமங்கள் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, பெரம்பலூர் வட்டத்தில் 6 கிராமங்களும், வேப்பந்தட்டை வட்டத்தில் 17 கிராமங்களும், குன்னம் வட்டத்தில் 13 கிராமங்களும் மற்றும் ஆலத்தூர் வட்டத்தில் 11 கிராமங்களும் வெள்ளம் பாதிக்கக்கூடிய பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதன்படி, மேற்கண்ட 47 கிராமங்களுக்கும் முன்னெச்சரிக்கை குழு, தேடுதல் மற்றும் மீட்புக் குழு, மக்களை வெளியேற்றி பாதுகாத்திடும் குழு, நிவாரணம் மற்றும் பாதுகாப்பு உறைவிடம் நிர்வகிக்கும் குழு உள்ளிட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இக்குழுவில் வருவாய் ஆய்வாளர் குழு தலைவராகவும், உதவி வேளாண்மை அலுவலர்கள் அல்லது கிராம நிர்வாக அலுவலர்கள் முதல் நிலைக் குழு உறுப்பினர்களாகவும், ஊராட்சி செயலர் அல்லது கிராம உதவியாளர் இரண்டாம் நிலை குழு உறுப்பினராகவும் செயல்படுவர்.
இக்குழு உறுப்பினர்கள் அனைவரும் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள முதல் செயல்பாட்டாளர்களுடன் அவ்வப்போது தொடர்பு கொண்டு, மழைக் காலங்களில் கிராமங்களில் ஏற்படும் அசாதாரண நிலையை மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவிக்கவேண்டும். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் மூலம் மாவட்ட ஆட்சியரகத்தில் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இலவச தொலைபேசி எண்களான 1077 மற்றும் 18004254556 என்ற எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்ற தகவலை செயற்பாட்டாளர்கள் மூலமாக கிராமங்களில் உள்ள அனைத்து மக்களிடமும் தெரிவிக்க வேண்டும்.
இதன் வாயிலாக மழைக்காலங்களில் மாவட்டத்தில் ஏதேனும் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிப்பதுடன், அவர்களுக்கு தேவைப்படும் முதலுதவிகளையும் கேட்டு பெறுவதற்கு வாய்ப்பாக அமையும். எனவே, மேற்கண்ட குழுவில் உள்ள அனைத்து அலுவலர்களும், செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள கிராமங்களில் ஏற்படும் வெள்ள பாதிப்புகளை உன்னிப்பாக கவனித்து மக்களை காத்திட வேண்டும், என தெரிவித்துள்ளார்.
மேற்கண்ட நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திஷாமித்தல், மாவட்ட வருவாய் அலுவலர் பாஸ்கரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் ஸ்ரீதர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) மனோகரன், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் மகாராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.