Authorities have been instructed to increase bus facilities to enable students to travel to school and colleges: Transport Minister Sivasankar
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்துார் ஊராட்சி ஒன்றியத்தில், காரை – மலையப்பநகர், ச.குடிகாடு – கொளக்காநத்தம் – நத்தக்காடு சாலை , சீராநத்தம் – கரம்பியம், ஜமீன் ஆத்துார் – மரவனூர் ஆகிய 4 சாலைகளை ரூ.1.90கோடி மதிப்பில் மேம்படுத்தும் பணிகளையும் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் இன்று கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் காரை கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
நமக்கு நாமே திட்டத்தின் கீழ், கொளக்காநத்தம் , அனைப்பாடி, அயினாபுரம் அரசு தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.17.60 லட்சம் மதிப்பிலான மேசை, நாற்காலி உள்ளிட்ட பொருட்களையும், அனைப்பாடி ஆதிதிராவிடர் தெருவில் ரூ.20 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் கட்டுவதற்கான பணியினையும் அடிக்கல் நாட்டியும்,
கொளக்காநத்தம் அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.48 லட்சத்தில் கட்டப்பட்ட புறநோயாளிகள் பிரிவு கட்டடத்தை திறந்து வைத்து, கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் தெரிவித்ததாவது: பள்ளி, கல்லூரி அமைந்துள்ள பகுதிகளில் மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு சென்றுவர ஏதுவாக பேருந்து வசதியினை அதிகரிப்பதற்கு அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டு அதன்படி நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
பள்ளி கல்லூரி வாகனங்கள் சரியான முறையில் பராமரிக்கப் படுகிறதா என அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். அனைத்து தனியார் பள்ளி வாகனங்களிலும் கேமரா பொருத்த வேண்டும் என்று கடந்த சட்டமன்ற கூட்டத்தில் அரசு சார்பாக அறிவிப்பு விடப்பட்டிருக்கிறது. அதை முன்னிட்டு அனைத்து தனியார் பள்ளி நிர்வாகத்தினரிடமும் பள்ளி பேருந்துகளில் கேமரா பொருத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் ஆலத்துார் யூனியன் சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, கொளக்காநத்தம் ஊராட்சித் தலைவர் ராகவன் மற்றும் அரசு பணியாளர்கள், திமுக கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.