Inspection of Perambalur Collector’s houses regarding the truthfulness of the applications for addition, deletion and correction of names in the voter list!
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், விண்ணப்பங்களின் உண்மைத்தன்மை குறித்தும் கலெக்டர் வெங்கடபிரியா விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்ற வாக்காளர் சிறப்பு சுருக்க திருத்த முகாமில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பாக முறையே படிவம்-6, படிவம்-7 மற்றும் படிவம்-8 ஆகிய படிவங்கள் பெறப்பட்டது.
அதன்படி, பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9,847 விண்ணப்பங்களும், பெயர் நீக்க 2,394 விண்ணப்பங்களும், பட்டியலில் திருத்தம் செய்தல் தொடர்பாக 3,926 விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது. இதனை வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது விண்ணப்பித்தினை பரிசீலனை செய்து அதன் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த பணிகளை கலெக்டர் ப.ஸ்ரீவெங்கட பிரியா பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கே நேரில் சென்று பார்வையிட்டு, விண்ணப்பதாரரின் கோரிக்கை குறித்த விபரங்களையும், அவர்களின் விண்ணப்பங்களுடன் கோரிக்கைக்கான முறையான ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளதா என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, வருவாய் சப்-கலெக்டர் ச.நிறைமதி, தாசில்தார் கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.