Is there a sign of corona infection? Perambalur Collector’s instruction to self-examine in hospitals
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள அறிவிப்பு:
தமிழக அரசு கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை மற்றும் அரசு சித்தா சிகிச்சை மையங்களில் கொரோனா நோய் தொடர்பான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. எனவே, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள், தங்களுக்கு சளி,வறட்டு இருமல், உடல்சோர்வு, தலைவலி, காய்ச்சல், நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வுதன்மை இழப்பு மற்றும் மூச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலோ அல்லது அரசு மருத்துவமனைகளுக்கு சென்று தங்களை தகுந்த பரிசோதனைக்கு உட்படுத்தி, கொரோனா நோய்த்தொற்று அறிகுறி இருக்கும்பட்சத்தில் ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை மேற்கொள்ள முன்வர வேண்டும். அவ்வாறு ஆரம்பக் கட்டத்திலேயே சிகிச்சை மேற்கொண்டால் கொரோனா நோயை எளிதாக குணப்படுத்தி உயிரிழப்புகளை தவிர்க்க முடியும்.
மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றால் அவர்களை தனிமைப்படுத்திவிடுவார்கள் என அச்சம் கொண்டு சிகிச்சைக்கு முன்வராமல் தன்னிச்சையாகவோ அல்லது மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் மருந்து கடைகளில் தாங்களே மருந்து வாங்கி சுயசிகிச்சை பெற்று வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு நோய் முற்றி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படும் போது, கொரோனா நோய் தாக்கத்தின் தீவிரம் காரணமாக உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, பொதுமக்கள் அனைவரும், மேற்கண்ட அறிகுறிகள் தென்பட்டால், உடனடியாக தாமாகவே முன்வந்து அரசு மருத்துவமனை அல்லது அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற முன்வர வேண்டும். தமிழக அரசானது கொரோனா நோய் பாதிக்கப்பட்டவர்களை நோயிலிருந்து மீண்டுவர உயர்தர சிகிச்சை அளித்து வருகிறது.
மேலும், தங்கள் வீட்டில் உள்ள முதியோர்கள், நீரிழிவுநோய், ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் பொது இடங்களில் நடமாடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும். கொரோனா வைரஸ் நோய் தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் அனைத்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகளுக்கும் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் தெரிவித்துள்ளார்.