Jewelry flush with sleeping businessman’s wife in Perambalur!
பெரம்பலூர் நகரில், வடக்கு மாதவி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே வசிக்கும், காய்கறி வியாபாரியான சண்முகசுந்தரம்(33), என்பவரின் மனைவி ரேவதி(28), நேற்று வழக்கம் போல் தனது மகன் பர்னேஷ்(5), கணவருடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த நிலையில், இன்று அதிகாலை 3 மணி அளவில் வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் சிலர், ரேவதி கழுத்திலிருந்த 2 பவுன் தாலியை பறித்து கொண்டு தப்பியோடி தலைமறைவாகினர்.
இது குறித்த புகாரின் பேரில் பெரம்பலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக, வீடுகள், கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்கள், வங்கிகள் நிதி நிறுவனங்கள் ஆகியவற்றில் தொடர் திருட்டு கொள்ளை முயற்சியும் நடந்து வரும் நிலையில், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இன்று நிகழ்ந்த நகை பறிப்பு சம்பவம் பெரம்பலூர் மாவட்ட மக்களை பெரும் பீதி அடைய செய்துள்ளது. எனவே பொது மக்களின் அச்சத்தைப் போக்கிட திருட்டு, கொள்ளை முயற்சி மற்றும் நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டு வரும் மர்ம நபர்களை விரைவில் காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.