Karthikai Deepa Festival on Brahma Rishi Hill: 2000 Meters of Thread Making Work Intensity!

பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூர் பிரம்ம ரிஷி மலையில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி 2 ஆயிரம் மீட்டர் திரி தயாரிக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை முதல் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

எளம்பலூர் மகா சித்தர்கள் அறக்கட்டளை சார்பில், உலக மக்கள் நலன் கருதியும், இயற்கை சீற்றங்களிலிருந்து மக்களை பாதுகாக்க வேண்டியும், ஒவ்வொரு ஆண்டும் பிரம்மரிஷி மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டு வருகிறது. அதன்படி, 40 ஆவது ஆண்டு தீபத் திருவிழா டிச. 6 ஆம் தேதி மாலை 6 மணியளவில் நடைபெறுகிறது.


இவ் விழாவில் 2 ஆயிரம் மீட்டர் திரி, 1,008 லிட்டர் நெய்யுடன், நல்லெண்ணெய், இலுப்பை எண்ணெய் மற்றும் 108 கிலோ கற்பூரம் கொண்டு, 5 அடி உயர செப்புக் கொப்பரையில் தீபம் ஏற்றப்பட உள்ளது. விழாவில் சாதுக்களுக்கு காசு தானமும், பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட உள்ளது.
திரி தயாரிக்கும் பணியில் மகா சித்தர்கள் அறக்கட்டளை இணை நிறுவனர் ரோகிணி மாதாஜி, தவயோகி தவசிநாதன் சுவாமிகள், மாதாஜி ராதா மற்றும் அறக்கட்டளை மெய்யன்பர்கள் ஈடுபட்டுள்ளனர்.

டிச. 6 ஆம் தேதி காலை 7 மணியளவில் எளம்பலூர் காகன்னை ஈஸ்வரர் கோயிலில் கோ மாதா பூஜை, அஸ்வ பூஜை நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 10 மணியளவில் பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோயிலில் மகா தீப செப்புக் கொப்பறை வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ஊர்வலமாக பிரம்ம ரிஷி மலைக்கு கொண்டுவரப்படுகிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை, மகா சித்தர்கள் அறக்கட்டளை மற்றும் சிங்கப்பூர் குரு கடாட்ஷம் மெய்யன்பர்கள் செய்து வருகின்றனர்.

 

 

அண்மைச் செய்திகள்


Copyright 2015 - © 2025 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!