Laboratories with modern technologies are being constructed in government ITI’s: Minister AV Velu Information!

பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் தலா ரூ.3.73 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களின் கட்டுமான பணிகளை பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு, கலெக்டர் வெங்கட பிரியா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கட்டிடப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் மிகவும் தரமானதாக இருக்க வேண்டும் என்றும், குறித்த காலத்திற்குள் பணிகளை நிறைவு செய்திட வேண்டும் என்றும் பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு பொதுப்பணித்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். பின்னர்,அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு அரசு தொழிற்பயிற்சி நிலையங்களை புனரமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்கள். அதனடிப்படையில் தமிழ்நாடு முழுவதும், 69 தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வகங்கள், வகுப்பறைகள் அமைக்க முடிவு செய்து, அப்பணிகளுக்காக ரூ.264.83 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.

பொதுவாக தொழிற்பயிற்சி கல்வியில் எலக்ட்ரிசியன், பிளம்பர், பிட்டர் உட்பட பல்வேறு பிரிவுகள் உள்ளது. இன்றைய சூழ்நிலையில் உள்ள வளர்ந்து வரும் நவீன தொழிற்சாலைகளில் உள்ள நவீன தொழில்நுட்பங்களை அறிந்து கொண்டால்தான் படிப்ப முடித்தவுடன் எளிதாக வேலை கிடைக்கும். எனவே, இந்த 69 தொழிற்பயிற்சி நிலையங்களில் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றவாறு ஆய்வுக்கூடங்கள் மற்றும் வகுப்பறை கட்டிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகிறது.

12.05.2022 அன்று பணிகள் துவங்கப்பட்டது. 2023 ஜனவரி 31-ம் தேதிக்குள் பணிகள் முடிக்கப்பட்டு வரும் கல்வியாண்டில் மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

பெரம்பலூர் மாவட்டத்தில், பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் பகுதிகளில் 2 தொழிற்பயிற்சி நிலையங்கள் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு தொழிற்பயிற்சி நிலையத்திலும், தலா ரூ.3.73 கோடி வீதம் ரூ.7.46 கோடி மதிப்பீட்டில் நவீன கருவிகளுடன் கூடிய ஆய்வகங்கள் மற்றும் வகுப்பறைகள் அமைக்கப்பட்டு வருகிறது. இரண்டு தொழிற்பயிற்சி நிலையங்களிலும் நவீன தொழில்நுட்ப பயிற்சிக்காக தலா 8 இயந்திரங்கள் கொண்ட ஆய்வக கூடமும், 4 வகுப்பறைகளும், சர்வர் அறை மற்றும் அலுவலர்கள் அறை என இரண்டு தொழிற்பயிற்சி நிலையங்களிலும், தனித்தனியாக 10,572 சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் கட்டப்பட்டு வருகிறது.

நவீன தொழில்நுட்ப பயிற்சி மூலம் தற்போதுள்ள தொழில்நுட்பங்களை மாணவ, மாணவியர்கள் அறிந்து கொண்டு, தொழிற்சாலைகளின் எளிதில் பணிகளை பெற வேண்டும் என்ற நோக்கில் தொழிற்பயிற்சி நிலையங்கள் நவீன மயமாக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் உடனிருந்து கவனித்து வருகிறார்கள். பணிகள் தரமாக நடைபெற்று வருகிறது. வரும் கல்வியாண்டில் மாணவ மாணவியர் சேர்க்கை நடைபெறும் வகையில் உரிய காலத்திற்குள் பணிகள் முடிக்கப்படும், என தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து, பெரம்பலூர் முதல் அரியலூர் செல்லும் சாலையில் இருந்து, அருமடல் வரை 3 கி.மீ. தூரத்திற்கு ஒருவழித்தடமாக இருந்த சாலையினை அகலப்படுத்தி விரிவுபடுத்தும் வகையில், நெடுஞ்சாலைத்துறையால் ரூ.4.20 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பிரிவு சாலையின் தரம் குறித்து அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, அரசின் விதிகளுக்கு உட்பட்டு தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளதா என்றும், சாலையின் நீளத்தையும், எத்தனை அடுக்குகள் சாலை போடப்பட்டுள்ளது என சாலையின் உயரத்தையும் அளவிடும் பிரத்யேக கருவிகள் மூலம் அளக்கச் சொல்லி ஆய்வு செய்தார். பின்னர், நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம் தார்ச்சாலையின் தரத்தை கேட்டறிந்த அமைச்சர் அவர்கள், அந்த சாலையின் ஓரம் மரக்கன்றுகள் நட்டு வைத்தார்.

அதனைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத்துறையின் கோட்டப்பொறியாளர் அலுவலகத்தில் ஆய்வு நடத்திய அமைச்சர், பெரம்பலுார் மாவட்டத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டுவரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், அலுவலகம் சார்ந்த பல்வேறு ஆவணங்களையும், அலுவலர்களின் வருகைப்பதிவேட்டையும் ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பெரம்பலூர் எம்.எல்.ஏ பிரபாகரன், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் இரா.ப.பரமேஷ்குமார், மாவட்ட யூனியன் சேர்மன் குன்னம் சி.ராஜேந்திரன், முன்னாள் எம்.எல்.ஏ ராஜ்குமார், ஆலத்தூர் யூனியன் சேர்மன் ந.கிருஷ்ணமூர்த்தி, பெரம்பலுார் நகராட்சித் தலைவர் அம்பிகா ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர்கள் டி.சி.பாஸ்கர், நகராட்சி துணைத் தலைவர் ஹரிபாஸ்கர், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் முத்தமிழ்ச்செல்வி மதியழகன், பெரம்பலூர் யூனியன் சேர்மன் மீனா அண்ணாதுரை, வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபாசெல்லப்பிள்ளை, முன்னாள் பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை, முன்னாள் வேப்பூர் யூனியன் சேர்மன் அழகு.நீலமேகம், பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!