Laying the foundation stone for new works worth Rs.1.34 crore, inaugurated the unfinished works: Transport Minister Sivashankar!
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதியில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று கலெக்டர் வெங்கட பிரியா தலைமையில், ரூ1.34 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற பணிகளை திறந்தும் வைத்தார்.
கிழுமத்தூர் ஊராட்சி பூங்கா நகரில் அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6.00 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், அகரம் சீகூர் ஊராட்சி வயலூர் ஆதிதிராவிடர் தெருவில் ரூ.12.62 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியினையும், ரூ.17.49 லட்சம் மதிப்பீட்டில் வயலூர் பால் கூட்டுறவு சங்கத்திற்கான கட்டிட பணிகளை போக்குவரத்துத்துறை அமைச்சர் பூமி பூஜையிட்டு தொடங்கி வைத்தார்.
மேலும், பெருமத்தூர் ஆதிதிராவிடர் காலனி பகுதியில் சாலை, கழிவுநீர் வாய்க்கால் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்திடும் வகையில் ரூ.40.00 லட்சம் மதிப்பிலான பணிகளையும், ஓலைப்பாடி ஊராட்சியில் ரூ.8.10 லட்சம் மதிப்பீட்டில் நியாய விலை கடை கட்டும் பணியினையும் அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
அதனைத்தொடர்ந்து கீழப்பெரம்பலூரில் ரூ 22.62 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தும், கருப்பட்டாங்குறிச்சியில் உள்ள அரசு தொடக்கபள்ளியில் ரூ.19.00 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வகுப்பறைகளின் கட்டுமான பணிகளை பார்வையிட்டார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர்சி.ராஜேந்திரன், மாவட்ட வருவாய் அலுவலர் நா.அங்கையற்கண்ணி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வேப்பூர் யூனியன் சேர்மன் பிரபா செல்லப்பிள்ளை, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவி முத்தமிழ்செல்வி மதியழகன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் டாக்டர்.கருணாநிதி, குன்னம் வட்டாட்சியர் அனிதா, வேப்பூர் முன்னாள் யூனியன் சேர்மன் அழகு.நீலமேகம் மற்றும் அரசு அலுவலர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.