LKG student injured as she ran away in road crying from out of school near Perambalur
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள அ.மேட்டூரை சேர்ந்தவர் மணிகண்டன் இவரது மகள் சஞ்சனா (வயது 3). சஞ்சனாவை அரும்பாவூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி வகுப்பில் சேர்த்துள்ளனர். இந்நிலையில் நேற்று பள்ளி நேரத்தில் வகுப்பிலிருந்து வெளியே வந்த சஞ்சனா தார் சாலையில் அழுது கொண்டே ஓடியுள்ளார். கனரக வாகனங்கள் உள்ளிட்ட வாகனங்கள் அதிகம் வரும் பகுதி. அதிர்ஷ்ட்டவசமாக வாகன ஓட்டிகள் ஒதுங்கி சென்றனர்.
அப்போது தார் சாலையில் தவறி விழுந்த சஞ்சனா காலில் லேசான காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்பகுதியில் கடை வைத்திருந்த பார்த்த சிலர் சஞ்சனாவின் தந்தை மணிகண்டனுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். பின்னர் விரைந்து வந்து மணிகண்டன் குழந்தை சஞ்சனாவை தூக்கிக்கொண்டு அவரது உறவினர்களுடன் பள்ளிக்கு வந்து முற்றுகையிட்டனர்.
அப்போது பள்ளி நிர்வாகத்திடம் உங்களை நம்பி பள்ளியில் குழந்தையை சேர்த்து உள்ளோம். ஆனால் உங்களின் பாதுகாப்பு குறைபாடினால் குழந்தை வீதிக்கு வந்துள்ளது. அங்கு லேசான காயத்துடன் எனது மகள் உயிர் பிழைத்துள்ளார். உயிருக்கு ஏதாவது ஆகி இருந்தால் என்ன செய்வோம் எனக் கூறி மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் வாக்குவாதம் செய்தனர்.
மேலும் உங்கள் பள்ளியில் எங்கள் குழந்தைக்கு பாதுகாப்பு இல்லை. எனவே நாங்கள் கட்டிய தொகையை திருப்பி கொடுத்து விடுங்கள். நாங்கள் வேறு ஒரு பாதுகாப்பான பள்ளியில் எங்கள் பிள்ளைகளை படிக்க வைத்துக் கொள்கிறோம் என கூறினர். அப்போது பள்ளி நிர்வாகத்தின் சார்பில் இனிமேல் இதுபோன்ற சம்பவம் நிகழாதவாறு பார்த்துக் கொள்கிறோம் என கூறி சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
எல்.கே.ஜி. மாணவி பள்ளியை விட்டு வெளிவந்து தார் சாலையில் தனியாக அழுது கொண்டு ஓடி காயமான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.