“Namma Uru Superparu” project: Collector, MLA launched in Siruvachur near Perambalur!
பெரம்பலூர் மாவட்டம் சிறுவாச்சூர் ஊராட்சி அலுவலகம் முதல் அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவில் வளாகங்களில் “நம்ம ஊரு சூப்பரு” என்ற திட்டத்தின் கீழ் தூய்மை பணிகளை மேற்கொள்ளும் வகையில் கலெக்டர் வெங்கடபிரியா, எம்.எல்.ஏ.பிரபாகரன் ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர். பின்னர் கலெக்டர் தெரிவித்தாவது:
மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும், நிலையான பாதுகாப்பான சுகாதாரத்தை கடைப்பிடிப்பதை உறுதி செய்யும் வகையிலும், சுற்றுப் புறத்தை தூய்மையாக பராமரிப்பதற்கும், ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளை எடுத்திடவும், பொதுமக்களுக்கு சீரான பாதுகாப்பான குடிநீர் வழங்குவதை உறுதிப்படுத்தவும் “நம்ம ஊரு சூப்பரு”என்ற திட்டம் அரசால் செயல்படுத்தப்படுகின்றது.
இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களிடையே நெகிழிப் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடவும், மக்கும் குப்பை மக்காத குப்பைகளை முறையாக அப்புறப்படுத்திடவும் உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும். தினந்தோறும் குப்பைகளை மக்கும் கழிவுகள், மக்காத கழிவுகள் என பிரித்து அப்புறப்படுத்த வேண்டும்.
திட மற்றும் திரவ கழிவுகளுக்கான மேலாண்மை நடைமுறைகள், ஒருமுறை பயன்படுத்தும் கழிவுகளை கடைகளில் விற்கப்படுகின்றதா என்பது குறித்து அவ்வப்போது ஆய்வு செய்து தடை செய்யப்பட்ட நெகிழி விற்கும் கடைகளை பூட்டி சீல் வைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். நெகிழிக்கு மாற்றாக என்னென்ன பொருட்களை பயன்படுத்தலாம் என்பது குறித்தும் பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களுக்கு சீரான பாதுகாப்பான குடிநீர் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுப்பதன் மூலம் சுற்றுப்புறம் தூய்மையாகவும் பசுமையாகவும் இருக்க வேண்டும் என்ற உணர்வை பொதுமக்களிடத்திலே ஏற்படுத்த வேண்டும். ஊரக வளர்ச்சித் துறை, வருவாய்த்துறை, பள்ளிக்கல்வி, உயர்கல்வி, வருவாய், சுகாதாரம் மற்றும் குடும்ப நலம், கல்வி, சமூக நலம், வனம், உணவுப் பாதுகாப்பு, சுற்றுலா உள்ளிட்ட அனைத்து துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சியால் மட்டுமே “நம்ம ஊரு சூப்பரு” என்ற சிறப்பு திட்டத்தின் பயனை அடைய முடியும்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் நீர் வழங்கல் துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் போன்ற துறைகளின் பங்களிப்பும் இத்திட்டத்தில் அதிக அளவில் இருக்க வேண்டும். அக்டோபர் 2 ஆம் தேதிக்குள் அனைத்து பகுதிகளும் தூய்மை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற இலக்குடன் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த நிலையை தொடர்ந்து கடைபிடிக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். பொதுமக்களும் அரசின் முயற்சிக்குத் துணை நிற்கும் வகையில் குப்பைகளை முறையாக தரம் பிரித்து அப்புறப்படுத்த வேண்டும் தங்களது சுற்றுப்புறத்தை தூய்மையாக சுகாதாரமாக வைத்திருக்க அனைவரும் முன்வர வேண்டும், என தெரிவித்தார்.
இதில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ், சிறுவாச்சூர் ஊராட்சி தலைவர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர், சிறுவாச்சூர் மேல்நிலைப் பள்ளி மற்றும் துறைமங்களம் டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாம்களை வரும் வழியில் கலெக்டர் வெங்கடபிரியா, பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.
விளம்பரங்கள்: