NEET Exam to resist fully : Do not fall into the trap of the federal government! PMK Ramadoss

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் விடுத்துள்ள அறிக்கை:

உயர்கல்விக்கான நுழைவுத்தேர்வுகளை நடத்துவதற்காக தேசிய தேர்வு முகமை என்ற புதிய அமைப்பை ஏற்படுத்தியுள்ள மத்திய அரசு, அதன் மூலம் அடுத்த ஆண்டு முதல் ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு கணினி மூலம் நடத்தப்படும் என அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த அறிவிப்பை அடிப்படையாகக் கொண்டு தமிழகத்தில் விவாதங்கள் எழுந்துள்ளன. மத்திய அரசின் இந்த அறிவிப்பு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக நடத்தப்படும் இயக்கங்களை திசை திருப்பும் நோக்கம் கொண்டதாகவே தோன்றுகிறது.

தமிழ்நாட்டிற்கு எந்த வகையிலும் தேவையில்லாத நீட் தேர்வை வலுக்கட்டாயமாக திணித்ததன் மூலம் மிகப்பெரிய சமூக அநீதியை மத்திய அரசு இழைத்திருக்கிறது. அதன் தொடர்ச்சியாக கணினி மூலம் நீட் தேர்வு, ஆண்டுக்கு இரு முறை நீட் தேர்வு ஆகிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

கிராமப்புற, ஏழை மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு எழுதிய அனுபவம் இல்லை என்பதால் கணினி மூலம் தேர்வு எழுதுவது அவர்களின் வாய்ப்புகளை பாதிக்கும்; ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்துவது தனிப்பயிற்சி நிறுவனங்களுக்கு வணிக வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான முயற்சி என்பது தான் தமிழகத்திலிருந்து எழுந்துள்ள குற்றச்சாற்றுகள் ஆகும்.

இது கூடுதல் சமூக அநீதி என்பதில் எந்தவிதமான மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால், இந்தக் கூடுதல் சமூக அநீதியை எதிர்க்கும் கட்டாயத்துக்கு தமிழகத்தை தள்ளுவதன் மூலம், முதன்மை சமூக அநீதியை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளுவதன் தான் மத்திய அரசின் நோக்கம் ஆகும். மத்திய அரசு விரித்துள்ள இவ்வலையில் தெரிந்தோ, தெரியாமலோ தமிழக அரசு விழுந்து விட்டதாகவே தெரிகிறது.

கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மத்திய அரசின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக நினைத்துக் கொண்டு ‘‘ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்தப்படும் என்ற மத்திய அரசின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் தான் நீட் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்’’ என்று கூறியுள்ளார்.

நீட் தேர்வு குறித்து தமிழக சட்டப்பேரவையில் அண்மையில் விவாதம் நடந்தபோது, நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டிருப்பதாகவும், அதற்கு விரைவில் ஒப்புதல் பெறப்படும் என்றும் முதல்வரும், அமைச்சர்களும் வாக்குறுதி அளித்திருந்தனர். அதன்பின் ஒரு சில வாரங்கள் கூட ஆகாத நிலையில், ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் நீட் தேர்வை நடத்த வேண்டும் என செங்கோட்டையன் கூறுவது ஏன்? அமைச்சர் வாய் தவறி இவ்வாறு கூறினாரா… அல்லது சமூக நீதிக்கு எதிரான நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள பினாமி அரசு தீர்மானித்து விட்டதா? என்பதை தமிழக ஆட்சியாளர்கள் தெளிவுபடுத்த வேண்டும்.

நீட் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனால், அந்தத் தேர்வால் இன்று வரை எந்த விதமான ஆக்கப்பூர்வ மாற்றங்களும் ஏற்படவில்லை.

மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுப்பதும், மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதும் தான் நீட் தேர்வின் நோக்கம் என்று மத்திய அரசு தெரிவித்தது. ஆனால், தகுதியையும், திறமையையும் ஒதுக்கி வைத்து விட்டு, பணம் இருந்தால் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மிக எளிதாக மருத்துவப் படிப்பில் சேர்ந்து விடலாம் என்ற நிலை தான் இப்போதும் நீடிக்கிறது. பணத்தை மட்டும் தகுதியாகக் கருதி மருத்துவப் படிப்பில் சேர்க்கப்படுபவர்களால் மருத்துவக் கல்வியின் தரம் உயரும் என எதிர்பார்ப்பது முட்டாள்தனமானது.

ஆக்கப்பூர்வமான எந்த பயனையும் அளிக்காமல், ஊரக, ஏழை மாணவர்களின் மருத்துவக் கல்வி வாய்ப்புகளை மட்டும் ஒரு தேர்வு பறிக்கிறது என்றால், இந்தியாவில் உடனடியாக அழிக்க வேண்டியது அந்தத் தேர்வைத் தான். ஆகவே, நீட் தேர்வு உடனடியாக நீக்கப்பட வேண்டும்.

உச்சநீதிமன்ற ஆணைப்படி தான் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுவதாக மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டாலும் கூட, ஒரு வகையில் இப்போது நடத்தப்படும் நீட் தேர்வு சட்ட விரோதமானது என்பது தான் உண்மையாகும்.

நீட் தேர்வு சட்டப்படி செல்லும் என்று உச்சநீதிமன்றம் இப்போது வரை எந்தத் தீர்ப்பும் வழங்கவில்லை. மாறாக நீட் தேர்வுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அல்தாமஸ் கபீர், விக்ரம்ஜித் சென், அனில்தவே ஆகியோர் அடங்கிய அமர்வு 18.07.2013 அன்று அளித்தத் தீர்ப்பில் நீட் தேர்வு செல்லாது என்று அறிவித்தது.

நீதிபதி அனில் தவே மட்டும் இதற்கு எதிராக தீர்ப்பளித்திருந்தார். இதனால் 2013 முதல் 2015 வரை இந்தியாவில் எங்கும் நீட் தேர்வு நடத்தப்படவில்லை என்பதே உண்மை. பின்னாளில் அத்தீர்ப்புக்கு எதிரான சீராய்வு மனுவை விசாரித்த நீதிபதி அனில் தவே தான் 2013&ஆம் ஆண்டு தீர்ப்பு செல்லாது என தீர்ப்பளித்தார்.

ஆனால், நீட் தேர்வு தொடர்பான முதன்மை வழக்கு இன்னும் விசாரிக்கப்படாமல், உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இரு ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ள அந்த வழக்கை விரைவாக நடத்தி, சாதகமான தீர்ப்பைப் பெறுவதன் மூலம் தான் ஊரக, ஏழை மாணவர்களுக்கான சமூகநீதியை பாதுகாக்க முடியும். எனவே, மத்திய அரசின் மாயவலையில் வீழ்ந்து விடாமல், நீட் தேர்வை அடியோடு அகற்றுவதற்கான சட்டப் போரை முழு வீச்சில் நடத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என தெரிவித்துள்ளார்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!