Nematode management in maize; Collector V. Santha calls on farmers to get 50 per cent subsidy from the government

File copy
பெரம்பலூர் கலெக்டர் வே.சாந்தா விடுத்துள்ள செய்திக்குறிப்பு:
பெரம்பலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் சுமார் 60 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் மக்காச்சோளம் மானாவாரி பயிராக பயிரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்காச்சோளத்தில் கடந்த 3 வருடங்களாக அமெரிக்கன் படைப்புழு மிகுந்த சேதம் விளைவித்து விவசாயிகளுக்கு மகசூல் இழப்பை ஏற்படுத்துகிறது.
விவசாயிகள், ஒருங்கிணைந்த பூச்சி கட்டுப்பாட்டு முறைகளை கடைப்பிடித்தால் மக்காச்சோளப் படைப்புழுவை கட்டுப்படுத்த முடியும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகம் பரிந்துரைத்துள்ள கீழ்க்கண்ட ஒருங்கிணைந்த மக்காச்சோளப் படைப்புழு மேலாண்மை முறைகளான, பேவேரியா பேசியானா மூலம் விதை நேர்த்தி செய்தல், நடவு செய்த 15-20 நாட்களில் வேப்பெண்ணெய் கரைசல் அசாடிராக்டின் 1500PPM தெளித்தல், 40-45 நாட்களில் மெட்டாரைசியம் அனிசோபிலே அல்லது ஸ்பைனிடோரம் 11.7 சதவீதம் அல்லது குளோரண்டானிலிப்பேரால் 18.5 சதவீதம்அல்லது தையாமீத்தாக்சோம் 12.6 சதவீதம் + லாம்டா சைக்ளோத்தரின் 9.5 சதவீதம் ஆகிய மருந்துகளில் ஏதேனும் ஒன்றை கை தெளிப்பான் கொண்டு குறுத்து நனையும்படி தெளித்து படைப்புழுவை கட்டுப்படுத்தலாம். மேலும் ஊடுபயிராக எள், சூரியகாந்தி, பயறுவகை பயிர்களை சாகுபடி செய்வதன் மூலம் படைப்புழுவை கட்டுப்படுத்தும் நன்மை செய்யும் பூச்சிகளை கவர்ந்திழுத்து படைப்பழுவை மேலாண்மை செய்ய முடியும்.
மேற்கண்ட ஒருங்கிணைந்த படைப்புழு மேலாண்மை முறைகளை கடைப்பிடித்து விவசாயிகள் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம் மூலம் பயிர்களை காத்திட எக்டேருக்கு 50 சதவீத செலவுத்தொகை அல்லது அதிகபட்சமாக ரூ.2ஆயிரம் பின்னேற்பு மானியமாக வழங்கப்படுகிறது. மேலும் கூடுதல் விவரங்களுக்கு தங்கள் வட்டாரங்களில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநரை தொடா;பு கொண்டு, உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பயனடையலாம் என தெரிவித்துள்ளார்.