“Non Social -interest Actors: Alert Warning” The Milk Agents Association Announcement.
தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்க நிறுவனர் சு.ஆ.பொன்னுசாமி விடுத்துள்ள அறிக்கை:
தமிழகத்தில் முன்னணி நடிகர்கள் திரைப்படங்கள் வெளியாகும் போதெல்லாம் அவர்களின் கட்அவுட்களுக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் எனும் பெயரில் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலினை வீணடிப்பதை நாம் அனைவரும் நன்கறிவோம். (இதை தடுக்க வேண்டிய நடிகர்கள் அதனை அமைதியாக பார்த்து ரசிக்கிறார்கள்)
மேலும் முன்னணி நடிகர்களின் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதற்காக ரசிகர்கள் எனும் போர்வையில் இருக்கும் சில சமூக விரோதிகள் நமது பால் முகவர்களின் கடைகளுக்கு வெளியே இறக்கி வைக்கப்பட்டிருக்கும் பாலினை திருடிச் சென்ற சம்பவங்கள் கடந்த காலங்களில் அரங்கேறியதையும், அதனால் பால் முகவர்கள் பலரும் வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் இழந்ததையும் நாம் அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம்.
எனவே தான் “ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளைச் செய்திட பணிக்குமாறு” முன்னணி நடிகர்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜீத்குமார், சூர்யா உள்ளிட்டோருக்கும், தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கும் பால் முகவர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பிருந்து தற்போது வரை கோரிக்கைகளை முன் வைத்து கடிதங்களை எழுதியும், ஊடகங்கள் வாயிலாக வேண்டுகோள் வைத்தும் வருகிறோம்.
இதில் நடிகர் திரு. கமல்ஹாசன் அவர்கள் சார்பில் தனது ரசிகர்கள் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்யாமல் இரத்த தானம், உடலுறுப்புதானம், கண்தானம் உள்ளிட்ட அறப்பணிகளை செய்திட அறிவுறுத்தி அறிவிப்பு வெளியிடப்பட்டது. நடிகர் விஜய் அவர்கள் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி வாயிலாக பெயரளவிற்கு மட்டும் பாலாபிஷேகம் செய்து பாலை வீணடிக்காதீர்கள் என வேண்டுகோள் விடுத்தார். நடிகர் சிவகார்த்திகேயன் அவர்களின் ரசிகர்கள் தன்னார்வத்தோடு மரக்கன்றுகளை வழங்கியும், தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.
ஆனால் நடிகர் ரஜினிகாந்த், அஜீத்குமார் மற்றும் சூர்யா உள்ளிட்ட இதர முன்னணி நடிகர்கள் எவரும் தங்களின் ரசிகர்கள் கட்அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதை தடுக்கவோ, ரசிகர்கள் எனும் மாபெரும் சக்தியை ஆக்கபூர்வமான பணிகளைச் செய்திட முன் வைக்கவோ தயாராக இல்லை.
காரணம் முன்னணி நடிகர்களைப் பொறுத்தவரை தங்களின் “ரசிகர்கள் விசிலடிச்சான் குஞ்சுகளாக இருப்பதையும், ரசிகர்கள் எவரும் விழிப்புணர்வு பெற்று விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்களோ…? என்கிற சந்தேகம் நமக்கு எழுகிறது”. ஏனெனில் “ரசிகர்கள் சிந்திக்க தொடங்கி, அவர்கள் விழிப்புணர்வு பெற்று விட்டால் தங்களின் சினிமா வியாபாரம் படுத்து விடும், அதனால் பணம் பார்க்க முடியாது” என்று எண்ணுகிறார்கள் போலும்.
இந்த சூழ்நிலையில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளை (10.01.2019) நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நடித்த “பேட்ட” நடிகர் அஜீத்குமார் அவர்கள் நடித்த “விஸ்வாசம்-2” ஆகிய திரைப்படங்கள் வெளியாக இருக்கின்றன.
“சமூக அக்கறை இல்லாத நடிகர்களுக்கு வேண்டுகோள்” வைத்து நமது நேரத்தை வீணடிப்பது என்பது “கடலில் கரைத்த பெருங்காயத்தின் வாசனையை அறிய முற்படுவதைப் போன்றது” என்பதால் இனி வருங்காலங்களில் அவர்களின் ரசிகர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சிகளை நாம் மேற்கொள்வோம்.
மேலும் நாளை (10.01.2019) அவர்களின் திரைப்படங்கள் வெளியாக இருப்பதால் பால் முகவர்கள் அனைவரும் தங்களின் கடைகளுக்கு முன் நள்ளிரவில் இறக்கி வைக்கப்படும் பாலினை கவனமுடன் பாதுகாத்துக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
ஏற்கனவே பால் முகவர்களின் கடைகளுக்கு வெளியே இறக்கி வைக்கப்பட்ட பாலினை திருடிய கயவர்களை தகுந்த ஆதாரங்களோடு காவல்துறையில் புகார் அளித்தும் இது வரை எந்த புகார் மீதும் நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை காவல்துறையினர் கைது செய்யவில்லை. அதனால் பால் முகவர்களாகிய நாம் நமது வாழ்வாதாரத்தை, வருமானத்தை தக்க வைத்துக் கொள்ள, பாதுகாத்துக் கொள்ள தகுந்த முன்னெச்சரிக்கையோடு செயல்படுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
அதுமட்டுமின்றி ரசிகர்கள் எனும் பெயரில் சமூக விரோதிகள் பாலினை திருடுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் இன்று முதல் ஒரு வார காலத்திற்கு பால் முகவர்கள் தங்கள் பகுதியில் குழுவாக செயல்பட்டு சுழற்சி முறையில் நள்ளிரவு நேரங்களில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுமாறும், சந்தேகத்திற்குரிய வகையில் எவரேனும் சுற்றித் திரிந்தால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்து விட்டு சங்கத்தின் தலைமை நிர்வாகிகளையும் தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறும் கேட்டுக் கொள்கிறோம், என தெரிவித்துள்ளார்.