Penalties for not wearing masks in Perambalur district: Collector announces!

பெரம்பலூர் மாவட்டம், பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில், பொதுமக்களுக்கு இலவச முகக்கவசங்களை வழங்கி, கொரோனா நோய்த் தொற்றிலிருந்து பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

கொரோனா பெருந்தொற்று நோயானது கடந்த டிசம்பர் 2019 முதல் (கோவிட் 19) உலகளவில் பரவி, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. கடந்த வருடம் உச்சத்தில் இருந்த கொரோனா நோய்த்தொற்று பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக படிப்படியாக தமிழகத்தில் குறைந்த நிலையில் இருந்தது. இருப்பினும், கொரோனா நோய்த்தொற்று ஆங்காங்கே கண்டறியப்பட்டு வருகிறது. ஆனால் பொதுமக்கள் இதன் தாக்கத்தினை உணராமல் இயல்பு நிலை திரும்பிவிட்டதாக எண்ணி பாதுகாப்பு அம்சங்களை முறையாக கடைபிடிப்பதில்லை. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பொதுமக்கள் நோய்த்தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டுமெனில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல், கைகளை கழுவி சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் மற்றும் அதிக கூட்டங்களுக்கு செல்வதைத் தவிர்த்தல் வேண்டும். தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று இரு சக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிந்து வருவது போல் பொதுமக்கள் கொரோனா நோய் தாக்கத்திலிருந்து விடுபட முகக்கவசம் அணிந்து வரவேண்டும்.

பொதுமக்களிடையே தடுப்பு நடவடிக்கைகளை வலியுறுத்தி அனைவரையும் பின்பற்றச் செய்வதன் மூலம் கொரோனா நோய் பரவலிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளலாம். கொரோனா பெருந்தொற்று நோய் தீவிரமாக பரவுவதனை தடுத்திட வேண்டுமெனில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொள்ள வேண்டும். அவற்றை பின்பற்ற தவறும் பட்சத்தில் தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம் 1939ன் படி அரசு, பொதுமக்களுக்கு அபராதம் விதிக்க கடமைப்பட்டுள்ளது.
எனவே, பொது இடங்களில் முகக்கவசம் அணிய தவறும் பொதுமக்களுக்கு ரூ.200-ம், சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறும் பொதுமக்களுக்கு ரூ.500-ம் அபராதம் விதிக்கப்படும். மேலும் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் திருமண மண்டபங்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாக கூடும் இடங்களுக்கு வரும் பொதுமக்கள் முகக்கவசம் அணியாத பட்சத்தில் அந்தந்த நிறுவனங்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கு ரூ.5,000- அபராதம் விதிக்கப்படும்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள், திருமண மண்டபங்களைச் சேர்ந்த உரிமையாளர்களும் கோவிட்-19 பெருந்தொற்று நோயிலிருந்து, தங்களது பணியாளர்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாத்திட முழுமையாக கடமைப்பட்டுள்ளனர். எனவே பாதுகாப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்ற வேண்டும்.

பொதுமக்கள் ஒவ்வொருவரும் கோவிட்-19 பெருந்தொற்று நோயிலிருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவ கல்லூரி முதல்வர் மரு.மீனாட்சி சுந்தரம், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) மரு.கீதாராணி, நகராட்சி ஆணையர் குமரிமன்னன், மலேரியா அலுவலர் சுப்ரமணி, வட்டார மருத்துவ அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News Today - Kalaimalar.

error: Content is protected !!