Perambalur: A 50-year-old demand; I have kept my election promise; Minister Sivashankar’s speech at the ceremony to distribute land titles to 277 people in the 3rd phase!

பெரம்பலூர் மாவட்டம், லப்பைக்குடிக்காடு பேரூராட்சி ஜமாலியா நகர் பகுதியில் வசித்து வரும் மக்களின் சுமார் 50 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 277 நபர்களுக்கு 3ம் கட்டமாக இலவச வீட்டுமனைப் பட்டாக்களை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் இன்று கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில் வழங்கினார். அப்போது அமைச்சர் சிவசங்கர் பேசியதாவது:
சட்டமன்ற உறுப்பினர் வேட்பாளராக இங்கு வந்து வாக்கு கேட்டபோது, ஜமாலியா நகருக்கு பட்டா வழங்கப்படும் என உறுதியளித்திருந்தேன். என்னை நம்பி வாக்களித்த உங்களின் கோரிக்கையினை தமிழ்நாடு முதலமைச்சரிடம் எடுத்துக்கூறியபோது, அதற்கான தீர்வு காணப்படும் என உறுதியளித்தார்.
மக்களுக்கான ஆட்சியாக சிறப்பான ஆட்சி நடத்திவரும் தமிழ்நாடு முதலமைச்சர், சொன்னபடியே சிறப்பு நடவடிக்கையாக ஜமாலியா நகர் பகுதி மக்களுக்கு பட்டா வழங்க உத்தரவிட்டதன் அடிப்படையில், மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையிலான வருவாய்த்துறையின் முழுவீச்சில் பணியாற்றி மூன்று கட்டங்களாக வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது.
08.02.2025 அன்று முதற்கட்டமாக 108 நபர்களுக்கும், 17.05.2025 அன்று இரண்டாவது கட்டமாக 310 நபர்களுக்கும் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டது. மூன்றாம் கட்டமாக இன்று 277 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்கப்படுகின்றது. இதுவரை மொத்தம் 695 நபர்களுக்கு வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் ஏறக்குறைய 50 ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இதற்காக அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர்கள், வருவாய் அலுவலர்கள், வட்டாட்சியர்கள் மற்றும் நில அளவைத்துறையினர், வருவாய்த்துறையினருக்கு மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஒரு அரசு எப்படி துரிதமாக செயல்பட வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றார்களோ அதற்கு உதாரணமாக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசு திகழ்கின்றது, மக்களின் கோரிக்கைகளுக்கு உடனுக்குடன் தீர்வு காணும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு நீங்கள் எப்போதும் உறுதுணையாக இருக்க வேண்டும், என தெரிவித்தார்.
பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், முன்னாள் எம்.எல்.ஏ துரைசாமி, குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, லெப்பைக்குடிக்காடு பேரூராட்சி தலைவர் ஏ.எஸ்.ஜாஹிர் உசேன், துணைத்தலைவர் ரசூல் அஹமது, முன்னாள் ஒன்றிய சேர்மன்கள் அழகு.நீலமேகம், பிரபா செல்லப்பிள்ளை, திமுக பொதுக்குழு உறுப்பினர் பட்டுச்செல்வி ராஜேந்திரன், சிறுகுடல் கரிகாலன், ஜமாலியா நகர் பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497