Perambalur: A young man who killed his friend in a fit of rage after he scolded his parents; Police station blockade; 2 people including Police suspended, DIG to conduct in-person investigation!
பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை வட்டம், கை.களத்தூர் காந்தி நகரைச் சேர்ந்தவர் மோகன் மகன் மணிகண்டன் (32),
அதே ஊரைச் சேர்ந்த அருண் என்பவர் நெல் அறுவடை செய்யும் இயந்திரத்தில் ஓட்டுனராக வேலை பார்த்து வந்தார். அருணின் மற்றொரு நெல் அறுவடை எந்திரத்தில், அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி மகன் தேவேந்திரன் (30) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளனர். நண்பர்களாக பழகிய இருவருக்கும் இடையில் கடந்த சில நாட்களாக கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மணிகண்டன் கை.களத்தூர் போலீசில் அளித்த புகாரின் பேரில், ஏட்டு ஸ்ரீதர் என்பவர் இரு தரப்பினரையும் கை.களத்தூர் காந்திநகர் பகுதியில் உள்ள அருண் என்பவரின் வயலில் நேரில் சந்திக்க வைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்துவதற்காக தேவேந்திரனை இன்று காலை அழைத்து சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே காத்திருந்த மணிகண்டனை கண்ட தேவேந்திரன் ஆத்திரமடைந்து தனது இருசக்கர வாகனத்தை உடனடியாக நிறுத்தி விட்டு கீழே இறங்கி ஓடி சென்று மறைத்து வைத்திருந்த அரிவாளால் மணிகண்டனை சரமாரியாக வெட்டி கொன்றான்.
இந்த திடீர் தாக்குதல் சம்பவத்தால் நிலைகுலைந்த மணிகண்டன் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்த மணிகண்டனை அங்கிருந்தவர்கள், மருத்துவமனைக்கு எடுத்து செல்ல முயன்ற போது மணிகண்டன் உயிரிழந்தார். இந்த திடீர் கொலை சம்பவத்தால், சமாதான பேச்சு வார்த்தைக்காக காத்திருந்தவர்களும், ஏட்டு ஸ்ரீதரும், ஊர்க்காவல் படையை சேர்ந்த பிரபு என்பவரும் அதிர்ச்சி அடைந்து, தேவேந்திரனை மடக்கிப் பிடித்து கை.களத்தூர் போலீஸ் ஸ்டேசனுக்கு அழைத்து சென்றனர்.
மணிகண்டன் கொலையான சம்பவம் குறித்து அறிந்த அவரது உறவினர்கள் மணிகண்டனின் சடலத்தை போலீஸ் ஸ்டேசன் அருகே கொண்டு வந்து கிடத்தி, கொலை செய்யப்பட்ட அவரது உயிரிழப்பிற்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், காவல் நிலையத்திற்குள் கொலைகாரன் தேவேந்திரனும், கொலைக்கு உடந்தையாக செயல்பட்டதாக கூறப்படும் ஏட்டு ஸ்ரீதரையும் தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என காவல் நிலையத்தை ஒரு தரப்பினர் முற்றுகையிட்டதால், அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளதோடு போலீஸ் ஸ்டேசன் மீது தாக்குதல் சம்பவம் ஏதும் நிகழ்ந்து விடக்கூடாது என பூட்டு போட்டு பூட்டப்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த திருச்சி சரக டிஐஜி வருண்குமார், பெரம்பலூர் போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ்பசேரா ஆகியோர் இடத்திற்கு விரைந்து சென்று, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட தேவேந்திரனிடமும், அவனை சம்பவ இடத்திற்கு அழைத்து சென்ற ஏட்டு ஸ்ரீதர் மற்றும் ஊர்க்காவல் படை வீரர் பிரபு இருவரையும் சஸ்பெண்ட் செய்த போலீசார் இது குறித்து அவர்களிடமும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவங்களால் கை.களத்தூர் கிராமத்தில் பெரும் பரபரப்பு நிலவி வருவதோடு, பெரம்பலூர் – சின்ன சேலம் சாலையில் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும் போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். சுமார் 7 மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொலை செய்த தேவேந்திரனிடம், போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், மணிகண்டன், தேவேந்திரன் பெற்றோரை தரக்குறைவாக திட்டி வந்ததால், ஆத்திரம் அடங்காமல் கொலை செய்ததாக தெரிவித்தான். கொலையுண்ட மணிகண்டனுக்கு மீனா (30) என்கிற ஒரு மனைவியும் நஸ்வின்(8), நஸ்விதா(6), என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இறந்து போன மணிகண்டனின் மனைவி மீனாவுக்கு அரசு வேலை வழங்குவதாகவும், நிவாரணத்தொகை பெற்றுத் தருவதாகவும், கொலையாளி தேவேந்திரன், சமாதான பேச்சு வார்த்தைக்கு அழைத்துச் சென்ற ஏட்டு ஸ்ரீதர், கொலை நிகழ்ந்த விவசாய வயலின் உரிமையாளர் அருண் உள்ளிட்ட வழக்கில் தொடர்புடைய அவர்கள் மீது எஸ்சி., எஸ்டி.,பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வதாகவும் மத்திய மண்டல டி.ஐ.ஜி.,வருண்குமார் தலைமையிலான சமாதான பேச்சுவார்த்தையில் உறுதியளித்ததை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது.