Perambalur Ammonites Center : Opened by Transport Minister Sivasankar
பெரம்பலூர் தாலூக அலுவலகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள “பெரம்பலுார் அமோனைட்ஸ் மையத்தினை” (PErambalur Ammonites CEnter – PEACE) போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், கலெக்டர் வெங்கடபிரியா தலைமையில் திறந்து வைத்தார். பெரம்பலூர் எம்.எல்.ஏ. பிரபாகரன், மாவட்ட ஊராட்சி சேர்மன் குன்னம் சி. ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்ததாவது:
பெரம்பலூர் மாவட்டத்தில் காரை, கொளக்காநத்தம், கரம்பியம் மற்றும் பிலிமிசை உள்ளிட்ட பகுதிகள் பலகோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலால் சூழப்பட்டு இருந்தபொது, கடலுக்கடியில் வாழ்ந்து வந்த கடல்வாழ் உயிரினங்கள், தாவரங்கள், மரங்கள் ஆகியவை காலப்போக்கில் புதையுண்டு படிமங்களாக மாறின. புவியியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டபோது, இப்படிமங்களின் முக்கியத்துவம் குறித்து உலகிற்கு தெரிய வந்தது. ஆலத்துார் ஒன்றியத்திற்குட்பட்ட சாத்தனுாரில் கோனிபர்ஸ் வகையை சார்ந்த (பூக்கள் தோன்றாத) அடிமரம் ஒன்று கல்மரமாக காட்சியளிக்கின்றது. புகழ்பெற்ற புவியியலாளர் டாக்டர் எம்.எஸ். கிருஷ்ணன் அவர்களால் 1940ஆம் ஆண்டு இந்த கல்மரம் கண்டறியப்பட்டது.
அதுமட்டுமல்லாது அம்மோனைட் எனப்படும் தலைக்காலி கடல்வாழ் உயிரினமானது சுமார் 41 கோடி ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியதாகவும், சுமார் 6.5 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஐந்தாவது பேரழிவின்போது டைசோனர்களோடு சேர்ந்த இந்த வகை உயிரினங்களும் முற்றிலுமாக அழிந்துவிட்டதாக ஆய்வியல் அறிஞர்கள், வல்லுநர்கள் ஆதராப்பூர்வமாக தெரிவிக்கின்றனர்.
இந்த பூமியில் சுமார் 10,000க்கும் மேற்பட்ட அம்மோனைட் தொல்லுயிர் எச்சங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கின்றனர். அவற்றில் 150க்கும் மேற்பட்ட தொல்லுயிர் எச்சங்கள் நமது பெரம்பலுார் மற்றும் அரியலுார் மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் இருந்து கிடைக்கப்பெற்றவை என்பது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த பெரம்பலுார் அம்மோனைட் மையத்தில் வெளிநாடுகளில் இருந்து கிடைத்துள்ள சில அரியவகை அம்மோனைட்களின் எச்சங்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
நமது மாவட்டத்தில் கிடைக்கும் அம்மோனைட் தொல்லுயிர் எச்சங்கள் குறித்த வரலாறை பொதுமக்களும், மாணவ-மாணவிகளும், ஆய்வு அறிஞர்களும் தெரிந்துகொள்ளவும், அவற்றை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் பெரம்பலுார் மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகம் வந்துசெல்லும் பிரதான பகுதியான வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் இந்த மையம் அமைக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்களும், ஆராய்ச்சியாளர்களும், ஆய்வறிஞர்களும் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
போலீஸ் எஸ்.பி. மணி, டி.ஆர்.ஓ., அங்கையற்கண்ணி, முன்னாள் வரகூர் எம்.எல்.ஏ துரைசாமி, பெரம்பலூர் தாசில்தார் கிருஷ்ணராஜ் மற்றும் திமுக பிரமுகர் வக்கீல் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் மகாதேவிஜெயபால், நகர்மன்ற உறுப்பினர்கள் துரை.காமராஜ், சேர்மன்கள், மீனா( பெரம்பலூர்), பேரூராட்சி தலைவர்கள் பூலாம்பாடி பாக்யலட்சுமி, அரும்பாவூர் வள்ளியம்மை உள்ளிடட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசுத் துறைகளின் அலுவலர்கள், ஒன்றிய செயலாளர்கள் நல்லத்தம்பி, அண்ணாதுரை, பலர் கலந்துகொண்டனர் .