Perambalur: Awareness rally against child marriage; Collector inaugurates it!

பெரம்பலூர் மாவட்டத்தில் குழந்தை திருமணம் நடைபெறாமல் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும், பல்வேறு வகையான விழிப்புணர்வு நடவடிக்கைகளையும் மாவட்ட சமூக நலத்துறை முன்னெடுத்து வருகின்றது. கலெக்டர் மிருணாளினியின் அறிவுறுத்தலின்படி குழந்தை திருமணத்தை தடுக்கும் வகையில் மாவட்ட, ஒன்றிய மற்றும் கிராம அளவிலான விழிப்புணர்வு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இதில், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த பணியாளர்கள் உள்ளனர்.

கடந்த ஓராண்டில் குழந்தை திருமணம் அதிகம் நடைபெற்ற பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன், அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டில் அதிக குழந்தை திருமணம் நடந்த கவுள்பாளையம் பகுதியில் வீடு வீடாகச் சென்று குழந்தைத் திருமணம் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களிடையே ஏற்படுத்தியுடன், குழந்தை திருமணத்தால் ஏற்படும் தீமைகள் குறித்த தகவல்கள் மற்றும் புகார் எண்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை கலெக்டர் ஒட்டினார்.

மேலும், பெற்றோர்கள் மற்றும் மாணவ மாணவிகள் பங்கு பெற்ற குழந்தை திருமணத்திற்கு எதிரான விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் மிருணாளினி தொடங்கி வைத்தார். குழந்தைத் திருமணத்திற்கு எதிரான உறுதிமொழியும் ஏற்கப்பட்டது.

கடந்த ஓராண்டில் பெரம்பலூர் ஒன்றியத்தில் கவுள்பாளையம், எறையூர், கல்பாடி, துறைமங்கலம், வடக்குமாதவி, பொம்மனப்பாடி ஆகிய கிராமங்களிலும், ஆலத்தூர் ஒன்றியத்தில் தெரணி, கொளக்காநத்தம், திம்மூர், நொச்சிக்குளம், மேலமாத்தூர் ஆகிய கிராமங்களிலும், வேப்பூர் ஒன்றியத்தில் பேரளி, பரவாய், பெரியவெண்மணி, பெருமத்தூர், கீழப்பெரம்பலூர் ஆகிய கிராமங்களிலும், வேப்பந்தட்டை வட்டத்தில் அரும்பாவூர், நூத்தப்பூர், நெய்க்குப்பை, தேவையூர், பசும்பலூர் ஆகிய கிராமங்களிலும் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளது. இந்த அனைத்து பகுதிகளிலும் இதுபோன்ற வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.

     ஆர்.டி.ஓ அனிதா, மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ,  மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ராகுல் காந்தி, மாவட்ட மகளிர் அதிகார மையம் மற்றும் ஒருங்கிணைந்த சேவை மைய  பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!