Perambalur: Bomb threat received via email at the district court!

பெரம்பலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக மின்னஞ்சல் மூலம் மர்ம நபர்கள் இன்று மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் பெரம்பலூர் மாவட்ட போலீசார் நீதிமன்ற வளாகத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இ-மெயிலில் வந்த திடீர் வெடிகுண்டு மிரட்டலால் பாதுகாப்பு கருதி நீதிமன்றத்திற்குள் இருந்த நீதிபதிகள், நீதி மன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள் உள்ளிட்ட பொதுமக்கள் என அனைவரும் நீதிமன்றத்தை விட்டு உடனடியாக வெளியேற்றப்பட்டனர். இதனால் பெரம்பலூர் மாவட்ட நீதிமன்ற வளாகத்திற்குள் பெரும் பரபரப்பு நிலவி வருவதோடு, வழக்கு விசாரணைகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
சோதனையில் நீதிமன்றத்திற்குள் சந்தேகத்திற்குரிய பொருட்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படாத நிலையில், வெடிகுண்டு மிரட்டல் போலியானதாக இருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தி வரும் போலீசார் மிரட்டல் விடுத்த நபர்கள் குறித்தும் தீவிர விசாரணையை நடத்தி வருகின்றனர். சமீப காலமாக நீதிமன்றங்கள், அரசு அலுவலகங்கள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் என நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இது போன்ற வெடிகுண்டு மிரட்டல்கள் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. சைபர் க்ரைம் போலீசார், வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாயை வரவழைத்து போலீசார் நடத்திய சோதனையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி என தெரிய வந்ததையடுத்து நீதிமன்ற ஊழியர்கள், வழக்கறிஞர்கள், வழக்காடிகள் நிம்மதி அடைந்தனர். மிரட்டல் விடுத்த ஆசாமியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497