Perambalur Co-op Tex Diwali Special Sale: Launched by the Collector!

பெரம்பலூர் கடைவீதியில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி 2022 சிறப்பு தள்ளுபடி விற்பனையை கலெக்டர் வெங்கடபிரியா இன்று காலை தொடங்கி வைத்தார்.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்கள் பயன்பெறும் வகையில் ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகையின்போது 30% சிறப்பு தள்ளுபடி விற்பனை திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. அதன்படி பெரம்பலூர் விற்பனை நிலையத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு தீபாவளி தள்ளுபடி விற்பனை ரூ.26.18 இலட்சங்கள் மதிப்பில் சிறப்பு தள்ளுபடி விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஆண்டு – 2022 தீபாவளிக்கு ரூ.50.00 லட்சம் மதிப்பில் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சிறப்பு திட்டமாக “கனவு நனவு திட்டம்” என்ற திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின் படி 10 மாத சந்தா தொகை வாடிக்கையாளரிடமிருந்து பெறப்பட்டு, 11 வது மற்றும் 12 வது மாத சந்தா தொகையினை கோ-ஆப்டெக்ஸ் செலுத்தி, மொத்த முதிர்வு தொகைக்கு தேவைப்படும் துணிகளை 20% தள்ளுபடியுடன் வழங்கப்படுகிறது.

பொதுமக்கள் பண்டிகை காலங்களில் கைத்தறி நெசவாளர்களின் வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வகையில் நெசவாளர்களுக்கு நேரடியாக லாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காகவும், பொதுமக்கள் பண்டிகை காலங்களில் நெசவாளர்கள் உற்பத்தி செய்த ஆடைகளை கோ ஆப்டெக்ஸ் நிறுவனங்கள் மூலம் ஆடைகளை வாங்கிச் சென்று நெசவாளர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த உதவிடும் வகையில் பண்டிகைக் காலங்களில் துணிகளை வாங்கி பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என செய்தியாளர்களை சந்தித்த வெங்கடபிரியா கேட்டுக்கொண்டார்.

கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ப.அம்சவேணி, மேலாளர் (இரகம் மற்றும் பகிர்மானம்) அன்பழகன், பெரம்பலூர் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் ரேகா, உட்பட அரசு அலுவலர்கள், வாடிக்கையாளர்கள், மற்றும் கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!