Perambalur Collector calls on farmers to benefit from the scheme for financing agri-producer companies.பெரம்பலூர் கலெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசு விவசாயிகளை ஒன்றினைத்து உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளாக உருவாக்கி, அவர்களை வேளாண் சாகுபடி மட்டும்மல்லாது, வேளாண் வணிகத்திலும் மேம்படச் செய்வதில் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. “உழவா; உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு கடன் வசதி அளித்து தொழில் துவங்க இடைநிலை மூலதன உதவி, கடன் உத்தரவாதம் மற்றும் சலுகையுடன் கூடிய சுழல் நிதி வழங்கும் திட்டங்கள் என மூன்று திட்டங்களையும் ஒருங்கிணைத்து வேளாண் பெருமக்களுக்கு வழங்குவதில் தேசிய அளவில் தமிழ்நாடு தான் முதல் மாநிலமாகத் திகழ்கிறது.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் நிதி ஆதாரம் போன்ற பல்வேறு சவால்களை எதிர்கொண்டு வருகின்றன. இச்சவால்களை எதிர்கொண்டு உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் இலாபகரமானதாக இயங்க வழிவகுக்கும் வகையில், அரசு கீழ்கண்ட திட்டங்களை தகுதி வாய்ந்த வேளாண் உற்பத்தியாளர் நிறுவனங்கள் பயன்பெற உருவாக்கியுள்ளது.
அதனடிப்படையில் இடைநிலை (Mezzanine) மூலதன உதவி திட்டத்தின் மூலம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் துவங்கியவுடன், அந்நிறுவனங்களில் உள்ள மூலதன பங்களிப்பினை அதிகரிப்பதன் மூலம் ஒவ்வொரு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கும் ரூ.10 லட்சம் வரை “இடைநிலை மூலதன கடன் உதவித் தொகை” வழங்கப்படும். இந்தத் தொகை மூலம் உழவா; உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் விளைப்பொருட்களை இலாபகரமாக சந்தைப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள இயலும். ஜந்தாண்டுகள் முடிந்த பிறகு இத்தொகையினை திருப்பி செலுத்தினால் போதுமானது. இதற்கு குறைந்த வட்டியாக 4 சதவீத வட்டி தான் ஆண்டுதோறும் செலுத்த வேண்டும்.
வங்கியில் கடன் பெறுவதற்கு தமிழ்நாடு அரசே வழங்கும் கடன் உத்தரவாதம் திட்டத்தின் மூலம் பொதுவாக உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் கடன் வேண்டி வங்கிகளை அணுகும்போது, அடமானம் கோருவதுடன் வங்கியில் வட்டி விகிதமும் அதிகமாக இருக்கும். இதனைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு உற்பத்தியார் நிறுவனமும் ரூ.1 கோடி வரை கடன் பெறுவதற்கு வங்கிகள் மற்றும் நாப்கிசான் நிறுவனத்திற்கு 50 சதவீத உத்தரவாதத்தை தமிழ்நாடு அரசே வழங்கும்.
சலுகையுடன் கூடிய சுழல் நிதி திட்டத்தின் மூலம் தற்போது உழவர் உற்பத்தியார் நிறுவனங்களுக்கு நிதி நிறுவனங்கள் கடன் வழங்கும்போது, இதர வணிக நடவடிக்கைகளுக்கு வழங்குவது போல் 12 முதல் 14 சதவீதம் வரை வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வட்டி விகிதத்தினை 8 முதல் 9 சதவீதமாக குறைக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் பங்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு சலுகையுடன் கூடிய கடன் வழங்கப்படும்.
உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை வலுப்படுத்தி, வணிகரீதியாக வளரும் வகையில் இத்திட்டத்தினை 4 ஆண்டுகளில் செயல்படுத்திட தமிழ்நாடு அரசு ரூ.266.70 கோடி ஒப்பளிப்பு செய்துள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்திட வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மற்றும் நாப்கிசான் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கடந்த ஆகஸ்ட் 2020-ம் மாதத்தில் கையொப்பமிடப்பட்டது. இத்திட்டத்தினை அரசு செயல்படுத்துவதால், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் கடன் உத்திரவாதம் பெற்றிட நிதி நிறுவனங்களை ஊக்குவிக்கவும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு மூலதன உதவி மற்றும் சலுகையுடன் கூடிய கடன் வழங்கவும் இயலும். மேலும் விவரங்களுக்கு உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் தங்கள் மாவட்டத்தின் வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என அதில் தெரிவித்துள்ளார்.