Perambalur: Collector informs that artists can apply for the art award for the year 2025-2026!

தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தவும் அவர்களை பாதுகாக்கும் நோக்கிலும் கலைஞர்களின் கலை திறனை சிறப்பிக்கும் வகையில் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் கலெக்டர் தலைமையில் செயல்பட்டு வரும் மாவட்ட கலை மன்றம் வாயிலாக தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த கலைஞர்களுக்கு 2002-2003 ஆம் ஆண்டு முதல் வயது மற்றும் கலை புலமைக்கு ஏற்ற கலை விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது.
2025-2026 ஆம் ஆண்டுக்கு பெரம்பலூர் மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் ஆகிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் 15 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கிட கலெக்டர் தலைமையில் தேர்வாளர் குழு கூட்டம் விரைவில் கூட்டப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரதநாட்டியம், ஒவியம், கும்மி கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், பாவை கூத்து, தோல் பாவை, நையாண்டி மேளம், கரகாட்டம், காவடியாட்டம், பொய்க்கால் குதிரை, மரக்கால் ஆட்டம், கோல் கால் ஆட்டம், கலியல் ஆட்டம், கனியான் கூத்து, புலி ஆட்டம், காளை ஆட்டம், மானாட்டம். பாம்பாட்டம், ஆழியாட்டம். கைசிலம்பாட்டம் (வீரக்கலை), மற்றும் இசைக்கருவிகள் வாசித்தல் முதலிய நாட்டுப்புறக் கலைகள் மற்றும் செவ்வியல் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து கலை விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
18 வயதும் அதற்கு உட்பட்ட கலைஞர்களுக்கு ”கலை இளமணி” விருதும், 19 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு ”கலை வளர்மணி” விருதும், 36 வயது முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு ”கலைச் சுடர்மணி” விருதும், 51 வயது முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு ”கலை நன்மணி” விருதும், 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு ”கலைமுதுமணி” விருதும் என பல்வேறு வகையான விருதுகள் வழங்கப்பட உள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் தங்களின் சுய முகவரியிட்ட விண்ணப்பத்துடன் வயது சான்று, ஆதார் நகல், கலை தொடர்பான சான்றிதழ்கள் நகல் மற்றும் பங்கேற்ற நிகழ்ச்சியின் புகைப்படங்கள் ஆகியவற்றினை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். தேசிய விருது, மாநில விருது, மற்றும் மாவட்ட கலை மன்றங்களில் வழங்கப்படும் விருதுகள் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க கூடாது. கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கான விண்ணப்பம் செய்த கலைஞர்கள் தற்போது புதிதாக விண்ணப்பிக்கலாம்.
இம்மாவட்ட விருது பெற தகுதிவாய்ந்த கலைஞர்களிடமிருந்து 30.03.2026 ஆம் நாளுக்குள் உதவி இயக்குநர், மண்டலக் கலை பண்பாட்டு மையம், நைட் சாய்ல் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி-06. என்ற முகவரிக்கு விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மிருணாளினி தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497