Perambalur Collector Santha inspects development projects of DRDA

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் மூலம் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித் திட்ட பணிகளை கலெக்டர் சாந்தா, செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மத்திய மாநில அரசுகள் அனைத்து பொதுமக்களும் உயர் தரமான அடிப்படை வசதிகளை பெற்றிடவும், உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும், பொதுமக்களின் தேவைகளை அறிந்து ஏராளமான அடிப்படை வசதிகளை செய்து வருகிறது. கட்டுமான பணிகள், கழிப்பறைகளை தூய்மைபடுத்தும் பணிகள், குடிநீர் வசதிகளை மேம்படுத்துதல், குடிநீர் வசதிக்காக புதிய கிணறுகளை தோண்டுதல், தோண்டிய கிணறுகளை ஆழப்படுத்துதல், தார்சாலைகள் அமைத்தல், மின்விளக்குகள் அமைத்தல் போன்ற அடிப்படை தேவைகளை உருவாக்கி தந்திட அதிகபடியான நிதிகளை ஒதுக்கி முழு வீச்சுடன் செயல்பட்டு வருகிறது.

அதனடிப்படையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் மூலம் நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த பள்ளி கட்டிடங்கள் மேம்படுத்தும் திட்டம் ( 2019-20), தேசிய கிராம சுய வேலைவாய்ப்பு திட்டம், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாடு நிதி திட்டம், பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம், ஒருங்கிணைந்த ஒப்படைக்கப்பட்ட வருவாய் திட்டம், நபார்டு திட்டத்தின் கீழ் சாலைகள் மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள், தமிழ்நாடு ஊரக சாலைகள் மேம்பாட்டு திட்டம், மூலதன நிதி திட்டம், மற்றும் பசுமை வீடுகள் கட்டும் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம், தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் நுண்ணுயிர் உரமாக்கும் மையம், மாநில நிதிக்குழு மானியத்தின் மூலம் நடைபெற்று வரும் பணிகள் நடந்து வருகிறது.

நாட்டார்மங்கலம் ஊராட்சிக்கு உட்பட்ட கூத்தனூர் கிராமத்தில் குடிநீர் தட்டுபாடு ஏற்படாமல் இருக்கவும் எதிர்வரும் காலங்களில் மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்றவாறு நீர் ஆதாரங்களை ஏற்படுத்திடும் வகையிலும் புதியதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.10.72 இலட்சம் மதிப்பீட்டில் வெட்டப்பட்டு வரும் குடிநீர் கிணற்றினையும், மேலும் இந்த கிணற்றிலிருந்து 3 கி.மீ தொலைவிற்கு பைப்லைன் அமைத்து 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இரண்டு மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளும், இரண்டு நீர்தேக்க தொட்டிகளுக்கும் மேல்மூடி அமைக்கும் பணிகள், மோட்டார் அறை அமைக்கும் பணிகள் உள்ளிட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களுடன் சென்று ஆய்வு செய்தார். இந்த பணி நிறைவடைந்ததும் 824 வீடுகள் பயனடையும் என்றும் தெரிவித்த கலெக்டர் சாந்தா,

நாட்டார்மங்கலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறையின் சார்பில் அதிகபடியான மரங்கள் வளர்க்கும் நோக்கத்திலும், கிராமப்புறங்கள் மற்றும் நகர்புறங்களை பசுமையாக்கும் நோக்கத்திலும், கிராமப்புறங்களில் குழிதோண்டி மரக்கன்றுகளை வைத்து அதனை நீர் ஊற்றி பாதுகாத்து பராமரிக்கும் முழு பணிகளையும் தீவிரமாக செய்து வருகின்றனர். அதனடிப்படையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.1 இலட்சம் மதிப்பீட்டில் தீவிர காடு வளர்க்கும் திட்டத்தின் கீழ் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வரும் பணியினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர், செட்டிக்குளம் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் ரூ.41.03 இலட்சம் மதிப்பீட்டில் வார சந்தை அமைய உள்ள இடத்தினை நேரில் பார்வையிட்டார்.

அதனைத் தொடர்ந்து சிறுவயலூர் ஊராட்சியில ஜல் ஜீவன் அபியான் உயிர்நீர் ஆதாரம் திட்டத்தின் கீழ் ரூ.53.98 இலட்சம் மதிப்பீட்டில் கிணறு ஆழப்படுத்தும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த கிணற்றின் மூலம் 453 வீடுகள் பயனடையும் என்றும், 60 ஆயிரம் லி கொள்ளளவு கொண்ட 2 மேல்நிலை நீர் தேக்க தொட்டிகளும், இரண்டு நீர்தேக்க தொட்டிகளுக்கும் மேல்மூடி அமைக்கும் பணி, மோட்டார் அறை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.

மேலும் நடைபெற்று வரும் பணிகள் குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பொதுமக்களின் வசதிக்காக தமிழக அரசால் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டுமானப் பணிகளை உயரிய தரத்துடன் விரைவாக முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர தொடர்புடைய அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது திட்ட இயக்குநர் லோகேஸ்வரி, செயற்பொறியாளர் செந்தில்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முரளி, வெங்கடேஷ்வரன், இளநிலை பொறியாளர் செல்வராஜ், ராஜன்பாபு, பாரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!