Perambalur District Banks to provide loans of Rs. 4267 crore target set: Collector information!

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் வங்கிகளுக்கான 2022 – 23 ஆம் நிதி ஆண்டிற்கான மாவட்ட முன்னோடி வங்கியான இந்தியன் ஓவர்சீஸ் வங்கி சார்பாக, ரிசர்வ் வங்கி மற்றும் நபார்டு வங்கியின் வழிகாட்டுதல் படி தயார் செய்யப்பட்ட கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெங்கடபிரியா மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் வெளியிட்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:

பெரம்பலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி, தனியார் வங்கி, மத்திய கூட்டுறவு வங்கி மற்றும் கிராமப்புற வங்கிகளுக்கு 2022-2023 ஆம் நிதி ஆண்டிற்கு ரூ.4,267 கோடி கடன் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதில் விவசாய கடன்களுக்காக ரூ.3,470 கோடியும், சிறு குறு தொழிலுக்கு ரூ.450 கோடியும், இதர முன்னுரிமை கடன்களுக்கு ரூ.347 கோடியும் கடனாக வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடத்தை விட ரூ.147 கோடி வங்கிகளுக்கு கூடுதலான இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2020-21 ஆம் வருடத்திற்கு ரூபாய் ரூ.4010 கோடியும், 2021-22 ஆம் ஆண்டிற்கு ரூபாய் ரூ.4,120 கோடியும் இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த நிதி ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கையில் விவசாயத்திற்கு 81% சதவீதமும், சிறு குறு தொழிலுக்கு 10% சதவீதமும், இதர முன்னுரிமை கடன்களுக்கு 9% சதவீதம் என இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2022-2023 ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக்கை படி அனைத்து வங்கிகளும் இலக்கினை அடைய வேண்டும். வங்கியாளர்கள் அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட்டு, மாவட்டத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என வங்கியினருக்கு தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைமை மண்டல உதவி பொது மேலாளர் திரு. கோடிஸ்வரராவ், முன்னோடி வங்கி மேலாளர் கோ.பாரத்குமார், நபார்டு வங்கி மாவட்ட மேலாளர் பிரபாகரன், ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மைய இயக்குநர் ஆனந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2024 — Kaalaimalar . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!