Perambalur: “Even as a member of the opposition, I will forever serve as the voice of our town”—Kunnam Constituency MLA Sivasankar declares in his vote of thanks speech.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு உட்பட்ட லப்பைக்குடிக்காட்டில் முன்னாள் அமைச்சரும், தற்போதைய குன்னம் தொகுதி எம்.எல்.ஏவுமான எஸ்.எஸ். சிவசங்கர் இன்று மாலை லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
“அன்பார்ந்த வாக்காளர் பெருமக்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராகப் போட்டியிட்ட என்னை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்தமைக்கு முதலில் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மிகக் குறிப்பாக, கடந்த தேர்தலில் எப்படி ஆதரவளித்தீர்களோ, அதே ஆதரவை இந்தத் தேர்தலிலும் அளித்து நம்முடைய குன்னம் தொகுதியினுடைய வெற்றியின் முதல் படிக்கட்டாக லெப்பைகுடிக்காடு என்றைக்கும் இருப்பதையும் என்பதை மீண்டும் நிரூபிக்கிற வகையிலே அந்தப் பணியைச் செய்தமைக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
கழகத் தலைவர் தளபதி அவர்கள் முதலமைச்சராக இருந்த நேரத்தில் நம்முடைய தொகுதிக்கு ஒரு அமைச்சர் பொறுப்பை வழங்கிய காரணத்தினால் இன்றைக்கு பல்வேறு பணிகளை நாம் எடுத்துச் செய்யக்கூடிய வாய்ப்பு கிடைத்தது. நம்முடைய பேரூராட்சியினுடைய நீண்ட நாள் பிரச்சனையாக இருந்த ஜமாலியா நகர் பட்டா கிடைக்கிற பிரச்சனையைத் தீர்ப்பதற்கான வாய்ப்பு அந்த நேரத்தில் கிடைத்தது. அதில் பெரும்பகுதியை நிறைவேற்றி இருக்கின்றோம். மீதமிருக்கின்ற பகுதியையும் அதை ஒட்டி தொடர்ந்து செய்து முடிப்பதற்காக உங்களோடு என்றைக்கும் நான் உறுதுணையாக இருப்பேன்.
அதேபோல நம்முடைய லெப்பைகுடிக்காட்டிற்கு வருவாய் கிராமம் தனியாக அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டும் முடிவுறும் தருவாயில் இருக்கிறது. நிச்சயமாக அதற்கான பணிகளையும் இந்த நேரத்தில் செய்வதற்கு என்ற உறுதியையும் அளித்துக் கொள்கிறேன்.
நம்முடைய கிராமத்தினுடைய அடிப்படை வசதிகளில் புதிய சாலை அமைக்கிற பணிகளெல்லாம் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. இன்னும் சில பணிகளிலே குடிநீர்க் குழாய் அமைக்கின்ற பணி முடிவுறாத காரணத்தினால் முடிக்காமல் இருக்கின்ற பணிகளை பேரூராட்சி நிர்வாகத்தோடு இணைந்து விரைவாக முடிப்பதற்கு நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இந்த நேரத்திலே தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆளுங்கட்சியாக இருந்த நேரத்தில் ஆற்றிய பணிகளைப் போலவே இன்றைக்கு எதிர்கட்சியாக இருந்தாலும் நம்முடைய ஊருக்கான குரலாக என்றைக்கும் நான் ஒலிப்பேன் என்பதனை இந்த நேரத்திலே மிகத் தெளிவாகத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்றாவது முறையாக நம்முடைய தொகுதியிலே போட்டியிட்டு வெற்றி பெறுகின்ற அந்த வாய்ப்பை கழகத் தலைவர் தளபதி அவர்கள் வழங்கி அதற்கு உறுதுணையாக நீங்கள் என்றைக்கும் இருக்கிறீர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில் எப்படி கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுடைய தலைமையிலே மிக ஒரு இணக்கமான உறவை தொப்புள்கொடி உறவாகப் ,இணைந்து இயங்கியதோ அதே செயல்பாட்டிலே இன்றைக்கும் நம்முடைய கழகத் தலைவர் தளபதி அவர்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதனால்தான் தமிழ்நாட்டிலே பெரும் அளவிலே திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்ற இடங்களில் நம்முடைய சமூகத்தினுடைய ஆதரவு மிகப்பெரிய ஆதரவாக அமைந்திருக்கின்றது.
எனவே, அதே உணர்வோடு என்றைக்கும் நாங்கள் தொடர்ந்து பயணிப்போம் என்பதையும் நம்முடைய கழகத் தலைவர் தளபதி அவர்கள் மிகத் தெளிவாக எடுத்துரைத்திருக்கின்றார்கள். அந்த வகையிலே என்றைக்கும் உங்களில் ஒருவனாக, உங்களோடு ஒருவனாக நான் இருந்து பணியாற்றுவேன் என்ற அந்த உறுதியை அளித்துக் கொள்கிறேன்.
இன்னும் நம்முடைய பகுதியில் நிறைவேற்ற வேண்டிய பணிகள் இருக்கின்ற அந்த பணிகளையெல்லாம் நிறைவேற்றுவதற்கு சட்டமன்ற உறுப்பினர் நிதி மூலமாகவோ அல்லது மற்ற வகையிலோ இந்தப் பணிகளை நிறைவேற்றுவதற்கு உங்களுக்கு உறுதுணையாக இருப்பேன் என்ற உறுதியை இந்த நேரத்திலே அறிவித்துக்கொண்டு இந்த மாலை நேரத்தில் இந்த நன்றியறிவிப்பு நிகழ்ச்சியிலே திரளாகக் கலந்து கொண்டு உங்களுடைய அன்பை வெளிப்படுத்தியதற்கு என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த நன்றியறிவிப்பு என்பது ஒரு அடையாளமாக, தேர்தல் முடிந்து தேர்தல் பணியிலிருந்து 10 நாட்களாகச் சென்னையிலே இருக்க வேண்டிய சூழல். சட்டமன்றம் கூடியது, சட்டமன்ற உறுப்பினர் பதவியேற்பு, அதற்குப் பிறகு சபாநாயகர் தேர்தல், பெரும்பான்மை நிரூபிக்கிற பணி, நேற்றைக்கு மாவட்டக் கழகச் செயலாளர் கூட்டம் என்று நேற்றைய கூட்டம் முடிந்து இரவு வந்த பிறகு இன்றைக்கு நம்முடைய பகுதியிலே முதல் நிகழ்ச்சியாகக் கலந்து கொள்ள வேண்டும் என்று நான் விரும்பினேன். மாலையில் வைத்துக் கொள்ளலாம் என்று நம்முடைய நிர்வாகிகள் அனைவரும் சொன்ன காரணத்தினால் காலையிலே துவங்கியிருந்தாலும் மாலையில் நம்மையெல்லாம், உங்களையெல்லாம் சந்தித்து என்னுடைய நன்றியைத் தெரிவிக்கின்ற முதல் பணியை நிறைவு செய்ய வேண்டும் என்றத் துடிப்புடன் இன்றைக்கு இங்கே இருக்கிறேன்.
இதே போன்று என்றைக்கும் இருப்பேன் என்ற அந்த உறுதியை அளித்து உங்கள் அத்தனை பேருக்கும் என்னுடைய மனம்கனிந்த நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன். நன்றி, நன்றி, வணக்கம்.” என பேசினார்.
முன்னதாக, இன்று காலை குன்னம் தொகுதியில் உள்ள திருமாந்துறை, பென்னகோனம், சு.ஆடுதுறை, ஒகளூர், அத்தியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் எம்.எல்.ஏ சா.சி. சிவசங்கர் தன்னை வெற்றி பெற செய்த வாக்காளர்களை சந்தித்து தனது கட்சியினருடன் சென்று நன்றி தெரிவித்தார்.
மாவட்டச் பொறுப்பாளர் வீ. ஜெகதீசன், ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், மருவத்தூர் ராஜேந்திரன், அழகு நீலமேகம், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பெரு கருப்பையா, ஒகளூர் முன்னாள் ஊராட்சித் தலைவர் கு.க.அன்பழகன், உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு திமுகவிற்கு வாக்களித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497