Perambalur: “Members of the TVK, you are once again eager to engage in the ‘Reels politics’ you practiced prior to the election; stop trying to garner sympathy and instead focus on serving the public”—Former Minister Sivasankar in an interview.

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தொகுதிக்கு லப்பைக்குடிக்காடு பேரூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த குன்னம் தொகுதி எம்.எல்.ஏ-வும், முன்னாள் அமைச்சருமான எஸ்.எஸ். சிவசங்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:
“புதிதாக அமைச்சராகி இருக்கின்ற ஆதவ் அர்ஜுனா நேற்று பேசுகின்ற பொழுது தேவையற்று பல்வேறு விஷயங்களைப் பேசியிருக்கிறார். ஒரு புதிய அமைச்சரவை பொறுப்பேற்று இன்னும் அதற்கான பணிகளைக் கூடத் துவங்கவில்லை. அமைச்சரவை விரிவாக்கம் எப்போது என்பது அவர்களுக்குத் தெரியவில்லை. ஒரு தடுமாற்றமான சூழ்நிலையில் அவர்கள் இருக்கின்ற நேரத்தில், இன்னும் சொல்லப்போனால் அவர்கள் மீது பொதுமக்களே குற்றச்சாட்டுகளை எழுப்புகின்ற ஒரு சூழலை ஆட்சிப் பொறுப்பேற்ற குறுகிய நாட்களில், 10 நாட்களில் அந்தச் சூழலை ஏற்படுத்திக்கொண்டு, தேவையற்ற வகையில் திராவிட முன்னேற்றக் கழகத்தை விமர்சனம் செய்வதைத் தன்னுடைய வேலையாக வைத்துக் கொண்டிருக்கின்றார்.
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர், எங்களுடைய இளந்தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் குறித்து பல்வேறு தரக்குறைவான விமர்சனங்களை வைக்கின்ற இடத்திலே இன்றைக்கு ஆதவ் அர்ஜுனா சென்று கொண்டிருக்கிறார். அவருடைய ஆட்சி அமைப்பதற்கு ஏதோ எங்களுடைய கழக இளைஞரணிச் செயலாளர், இன்றைய எதிர்க்கட்சித் தலைவர், மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முயற்சி செய்ததாக அவர் சொல்கிறார். தொடக்கத்திலிருந்தே திராவிட முன்னேற்றக் கழகத்தில் சொல்லிக்கொண்டிருக்கிறோம், இந்த ஆட்சி அமைவதில் எங்களுக்கு எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை.
கவர்னர் ஆட்சி அமைந்து விடக்கூடாது, பாஜக எந்தவிதமான நடவடிக்கையும் எடுத்துவிடக் கூடாது என்று ஆளுநர் விரைந்து அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். எங்களுடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சிகள் தான், முதலில் அவர்களுக்கு அவருடைய ஆட்சி கவிழாமல் இருப்பதற்கான ஆதரவைத் தந்திருக்கிறார்கள். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரை அவர்கள் முதலிலேயே சென்று விட்டாலும், மற்ற கட்சிகள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய அணியில் தான் இருக்கிறோம், மதச்சார்பற்ற கூட்டணியாக நாங்கள் செயல்படுகிறோம் என்று கம்யூனிஸ்ட் கட்சிகளாக இருந்தாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியாக இருந்தாலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்காக இருந்தாலும் தொடர்ந்து வெளிப்படையாகச் சொல்லி அவர்களுக்கு ஆதரவைத் தந்திருக்கின்றார்கள்.
அதேபோல அதற்கான வாழ்த்துகளையும் திராவிட முன்னேற்றக் கழகம் சொல்லியிருக்கிறது. ஆனால் அதையெல்லாம் விடுத்து ஏதோ அந்த ஆட்சி வருவதை உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தடுக்க முனைந்தது போன்ற ஒரு குற்றச்சாட்டை வைத்துக்கொண்டு, குதிரை பேர அரசியல் நடத்துகின்ற அவர்கள் இன்றைக்கு மீண்டும் இதே மக்களிடத்திலே அனுதாபம் பெறலாமா என்று முயற்சி செய்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு சம்பவத்தின் போதும் எப்படியாவது மக்களிடம் அனுதாபம் பெறுவது மாத்திரமே தங்களுடைய வழக்கமாகக் கொண்டவர்கள்.
இன்னும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், கருரிலே நடைபெற்ற சம்பவத்திற்கு அவருடைய அலட்சியத்தால், அவருடைய அதிகார ஆசையால், அங்காங்காரத்தால், ஆணவத்தால் 41 பேர் உயிரிழந்த நிலையில் அதற்குப் பொறுப்பேற்கக் கூட முன்வராமல், அன்றைக்கும் சிஎம் சார் என்று ஒரு வீடியோ வெளியிட்டு மக்களுடைய கவனத்தைத் திருப்பினார். தேவையற்ற கட்சிகளுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டாம் என்று நாங்கள் தவிர்த்த காரணத்தினால் அதையே தனது மூலதனமாக்கி பொதுமக்களிடத்திலே தொடர்ந்து ஒவ்வொரு விஷயத்திலும் ஏதோ அவருக்கான நெருக்கடியைத் திராவிட முன்னேற்றக் கழகம் தந்தது போல முதலிலே கட்டமைத்துக் கொண்டு வந்தார்.
தேர்தல் நேரத்திலே ஆட்சி அதிகாரம் என்பது தேர்தல் கமிஷன் கையிலே இருக்கும். அந்த நேரத்தில் அவர் பிரச்சாரத்திற்கு காவல்துறை அனுமதி கொடுக்காததைக் கூடத் திராவிட முன்னேற்றக் கழகம் செய்தது போலச் சொல்லி வந்தார். வாங்கிய அனுமதி கூடப் பிரச்சாரம் செய்யாமல் தவிர்த்தவர்கள் அவர்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது சொல்லி வந்தார்கள். இப்பொழுதும் அதையே இப்படிப் பொய்க் குற்றச்சாட்டை அள்ளி வீசினால் நாங்கள் பேசாமல் இருப்போம் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்.
இதுகுறித்தான விளக்கத்தை எல்லோரும் சொல்லியிருக்கிறார்கள். நாங்கள் மறுத்திருக்கிறோம். விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் அண்ணன் எழுச்சித் தமிழர் அண்ணன் தொல். திருமாவளவன் அவர்கள் விளக்கமளித்திருக்கிறார். அதிமுக-வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இதற்கு விளக்கம் தெரிவித்திருக்கிறார். கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் மரியாதைக்குரிய பேபி அவர்கள் இது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். இப்படி எல்லோரும் விளக்கம் அளித்த பிறகும் மீண்டும் அதையே பேசுகிறார்.
ஒரு ஆட்சி அமைந்தால், அந்த ஆட்சி அமைந்த நேரத்தில் அந்த ஆட்சி அமைந்த உடன் அந்த மகிழ்ச்சியிலே அதற்கான நடவடிக்கைகளைத் துவங்குவதுதான் ஒரு கட்சியுடைய நடவடிக்கையாக இருக்கும். ஆனால் இன்றைக்கு ஆட்சி அமைத்திருக்கின்ற தமாகா என்பது அவர்கள் எதிர்பார்த்த ஒரு சூழல் அமையாமல் ஒரு தொங்கிய நிலையிலே அவர்கள் இருக்கிறார்கள், மற்றவருடைய ஆதரவைத் தேடிய நிலையில் இருக்கிறார்கள். அந்த நிலையிலே அவர்கள் மற்றவர்கள் மீது குற்றம் சுமத்தி இதன் மூலம் மக்களிடத்திலே மறுபடியும் அனுதாபத்தைத் தேடிக்கொள்ளலாம் என்ற முயற்சியில்தான் இந்த ஆதவ் அர்ஜுனாவினுடைய பேச்சு இருக்கிறது.
ஆனால், சட்டமன்றத்திலே எங்களுடைய திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவர், தமிழ்நாடு அரசினுடைய எதிர்க்கட்சித் தலைவராக இருக்கின்ற மரியாதைக்குரிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு இன்னும் பதில் சொல்லவில்லை. அதேபோல சட்டமன்றத்திலே தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்லவில்லை. அங்கே பல்வேறு குரல்கள் இதை ஒட்டியே எழுந்தன. இந்த அரசு குதிரை பேரம் நடத்தித் தான் தங்களுடைய மெஜாரிட்டியை நிரூபிப்பதற்குத் துடிக்கிறார்கள். நானே கூட அன்றைக்குப் பேட்டியிலே சொல்லியிருக்கிறேன், அவர்களுக்குத் தேவையான ஆதரவு 120 என்கின்ற எண் வந்துவிட்டது. ஆனால், அதற்கு மேலும் அதிமுக-வை உடைத்து…
“அதன் மூலமாக இன்றைக்கு தங்களுடைய எண்ணிக்கை கூடுதலாக்குவதற்கு துடிக்கிறார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தை தீய சக்தி என்றும், அஇஅதிமுகவை ஊழல் சக்தி என்றும் சொல்லி தாங்கள் தான் தூய சக்தி என்று சொன்னவர்கள், இன்றைக்கு அரசியல் அதிகாரத்திற்காக அதிமுகவை உடைக்கின்ற பணியை வெளிப்படையாகச் செய்திருக்கிறார்கள்.
அந்தக் கட்சிக்கு பொதுச்செயலாளராக இருப்பவர் எடப்பாடி பழனிசாமி, சட்டமன்றக் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. ஆனால், அவரை விடுத்து சி.வி. சண்முகம் என்கிற முன்னாள் அமைச்சர் தலைமையிலான குழுவை போய் விஜய் சந்தித்தார். இன்னும் சொல்ல வேண்டுமென்றால், திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்களைச் சந்தித்து அரசியல் நாகரிகம் ஏற்படுத்துகிறேன் என்று சொல்லி எல்லா கட்சித் தலைவர்களையும் சந்தித்தார்.
இப்பொழுது அதிலேயே சந்தேகம் வருகிறது. சி.வி. சண்முகத்தை நேரடியாகச் சந்தித்தால் அதிலே குற்றச்சாட்டு எழுந்து விடுமோ என்பதற்காகத்தான் ஒரு தற்காப்புக்காக அரசியல் நாகரிகம் என்ற பெயரிலே மற்ற கட்சித் தலைவர்களைச் சந்தித்தார். அப்படி அவர் சந்தித்திருந்தால், அதிமுகவின் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்களை முதலில் சந்தித்திருக்க வேண்டும்.
அதேபோல தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களைச் சந்தித்திருக்க வேண்டும். ஆனால் இவர்களையெல்லாம் சந்திப்பதைத் தவிர்த்துவிட்டு, சி.வி. சண்முகத்தைச் சந்தித்திருப்பது அந்தக் கட்சியை உடைத்து, சி.வி. சண்முகம் தலைமையிலே ஒரு அணியைத் திரட்டி, அதன் மூலமாகத் தங்களுக்கு எண்ணிக்கை அதிகப்படுத்திக் கொள்வதற்காகத்தான் என்பது வெளிப்படையாகத் தெரிய வந்திருக்கிறது.
இதை இன்றைக்கு எல்லா கட்சியையும் சேர்ந்தவர்கள் விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதேபோல அமமுகவின் உறுப்பினர் காமராஜ் அவர்களை அந்தக் கட்சியினுடைய பொதுச்செயலாளருடைய அனுமதி இல்லாமல் நேரடியாக அவரிடத்திலே ஆதரவு கேட்டு, அவரை கூட்டி வந்து அது குறித்து டிடிவி தினகரன் அவர்கள் பல்வேறு விமர்சனங்களை எழுப்பி, காமராஜும் தான் தவெக ஆட்சிக்கு ஆதரவு தரவில்லை என்று சொல்லி கவர்னர் மாளிகைக்கு சென்றவர், சட்டமன்றத்திலே வந்து நான் இந்தக் கட்சிக்கு ஆதரவு என்று சொல்கிறார் என்றால், வெளிப்படையாக இது குதிரை பேரம் தான் என்பதை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
இப்படி எல்லா விதத்திலும் செய்துவிட்டு ஆதவ் அர்ஜுனா இன்றைக்குத் தேவையற்ற பேச்சுகளை எல்லாம் பேசி வருகிறார். அரசியல் களம் என்பது இன்றைக்கு இருப்பது போல் நாளை இருக்காது, நாளை இருப்பது போல் நாளை மறுநாள் இருக்காது, எல்லா நேரத்திலும் மாறக்கூடியது. ஆட்சிக்கு வந்து அமைச்சர் என்ற பதவியில் அமர்ந்தவுடன் ஒட்டுமொத்த தமிழகமும் தன் காலடியில் வந்துவிட்டது போல் ஆதவ் அர்ஜுனா நினைத்துக் கொண்டிருக்கிறார்.
ஒருவேளை தவெக அவர் கொடுத்த பணத்திற்கு அவரிடத்திலே கட்டுப்பாட்டில் இருக்கலாம். ஆனால் தமிழகம் முழுவதும் அவர்கள் கட்டுப்பாட்டிலே இல்லை என்பதை அவர் மனதிலே கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரம் என்றைக்கும் நிலைத்திருப்பதில்லை. அந்த அதிகாரம் இன்றைக்கு வந்துவிட்ட காரணத்தினால் தேவையற்ற விமர்சனங்களை வைக்கிறார்.
சட்டமன்றத்திற்கு வந்து நாங்கள் பேசாமல் கட்டுப்பட்டிருந்தோம் என்கிறார். பேசுவதற்கு அவரிடத்திலே பதில் இல்லை. அதன் காரணமாகத்தான் தவெக கட்சியினர் சட்டமன்றத்திலே பெரும்பான்மை பலத்தை நிரூபிக்கின்ற அன்றைக்கு அமைதியாக இருந்துவிட்டார்கள்.
முதல்வர் விஜய் அவர்களும் சட்டமன்றத்தில் பேசாமல் வீட்டுக்கு போய் அங்கே ட்விட்டரில் பதில் போடுகிறார். ஏனென்றால் களத்தில் நின்று பதில் சொல்வதற்கு அவர்களிடத்திலே தகுதி இல்லை, அருகதை இல்லை, அதற்கான நேர்மை இல்லை. அதன் காரணமாகத்தான் அங்கே போய் பதில் சொன்னார்கள்.
இன்றைக்கு அதைப் பூசி மெழுகுவதற்காக, மறைப்பதற்காக ஆதவ் அர்ஜுனா இங்கே பேசுகிறார். சட்டமன்றத்தில் பேசினால் பதில் வரும் என்பதினால் தன்னுடைய தொகுதியில் போய் பேசுகிறார். நான் ஆதவ் அர்ஜுனாவுக்குச் சொல்லிக் கொள்வேன், இது உங்களுடைய தொழில் சாம்ராஜ்யம் அல்ல. இது தமிழ்நாடு, சுதந்திர தமிழ்நாடு.
எங்களுடைய மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சொன்னது போல 35 சதவீதத்தைக் கொண்டு ஒரு ஆட்சிக்கு வந்திருக்கிறீர்கள். நீங்கள் அந்த சதவீதத்தை வைத்துக் கொண்டிருக்கின்ற போது உங்களிடத்திலே இருக்கின்ற உண்மையான எண்ணிக்கை 107. 234 பேர் கொண்ட சபையிலே 107 பேரை வைத்துக் கொண்டு ஏதோ 160 பேர் 170 பேர் ஒட்டுமொத்தமாக ஜெயித்து ஒரு பெரிய பெரும்பான்மையில் வந்தது போல் பேசிக் கொண்டிருப்பது என்பது ஒரு நாகரிகமற்ற செயல், முதிர்ச்சியற்ற செயல்.
ஆட்சி அதிகாரத்தில் வந்து அதற்கான பணிகளை இன்னும் துவங்கவில்லை. நீங்கள் பொறுப்பேற்ற பிறகு யாருக்கு எந்தத் துறை என்று இன்னும் தெரியவில்லை. எந்த அதிகாரிகளிடத்திலும் அமைச்சர்கள் எந்தப் பணியையும் துவங்கவில்லை. முதலமைச்சர் இரண்டு கூட்டங்களை நடத்திவிட்டு ஏதோ இன்றைக்குத் தமிழகத்தில் எல்லாவற்றையும் செய்வது போல ஒரு மாயையைக் காட்டுவதற்கு முனைகிறீர்கள்.
முதலில் இந்த ஆட்சி அமைப்பதற்கான பணியை நீங்கள் முழுமையாகத் துவங்குங்கள், மக்களுக்கான பணியைச் செய்யுங்கள். அதை விட்டுவிட்டு ஏற்கனவே ரீல்ஸில் பெண்களை விட்டு அனுதாபம் தேடுவதைப் போல நீங்களும் அதே பணியைச் செய்யாதீர்கள். மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், அந்த வாக்குறுதிகளை நீங்களே நிறைவேற்றத் தேவையில்லை என்று உங்கள் கட்சிப் பெண்களையே ஏதோ பொது மக்கள் போலப் பேச வைத்து அதை மீண்டும் தேர்தலுக்கு முந்தைய அரசியல் இன்ஸ்டாவில் செய்த ரீல்ஸ் அரசியலை மீண்டும் செய்யத் துடிக்கிறீர்கள்.
தமிழ்நாட்டு மக்களிடத்திலே அது எடுக்காது. தேர்தலுக்கு முன் கையில் ஆப்பையில் எந்தப் பொருளும் இல்லாமல் எண்ணெய் இல்லாமல் ஆப்பையைச் சுற்றுவது வேறு. தேர்தலுக்குப் பிறகு இன்றைக்கு ஆட்சி அதிகாரத்திற்கு வந்திருக்கிறீர்கள். மக்களுக்கான பணியைச் செய்ய வேண்டும். அந்தப் பணியைச் செய்யாமல் மீண்டும் மீண்டும் எதிர்க்கட்சி போன்று பேசுவது என்பது பயனுக்கு ஆகாது, மக்களுக்கான பணியாகாது. எனவே ஆதவ் அர்ஜுனா தன்னுடைய வார்த்தைகளைக் கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும். தங்களுடைய கட்சி வெற்றி பெற்றிருக்கிறது என்ற அந்த எண்ணம் இருந்தால் அந்த மக்களுக்கான சேவையைச் செய்ய வேண்டும் என்று இந்த நேரத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்தித் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடுத்தபடியா, அவர் (விஜய்) எடுத்தவுடனே செய்த முதல் பணி என்ன? அவருடைய அரசுக்கு, அவருக்கு ஒரு தனி அதிகாரியை (Special Officer) நியமிக்கிறார். அவர் நியமிக்கப்படக்கூடாது என்று எங்கிருந்து முதன்முதலில் குரல் வந்தது? விடுதலை சிறுத்தைகள் கட்சியிலிருந்து வந்தது, கம்யூனிஸ்ட் கட்சிகளிடமிருந்து வந்தது, காங்கிரஸ் கட்சியிலிருந்தே வந்தது. அப்படி ஆதரவு கொடுக்கிறவர்களுடைய நிலை அறியாமல் இவர்கள் ஓர் அரசினுடைய செயல்பாட்டைத் துவக்கி இன்றைக்கு எதிர்ப்பைச் சம்பாதித்திருக்கிறார்கள். அதே போன்றுதான் தொடர்ந்து அவர்கள் சந்திப்பார்கள்.
இன்றைக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினுடைய நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் ரவிக்குமார் அவர்கள் மிகத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத சூழல் வந்துவிடும், அவர்கள் அதிமுகவைப் பிளவுபடுத்தி வருவது என்பது கட்சித் தாவல் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கக்கூடிய சூழல் வந்தால் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மிகத் தெளிவாகக் கூட்டணிக் கட்சியிலிருந்தாலும் அவர்கள் அறிவுரை கூறியிருக்கிறார்கள்.
இப்படி அரசியல் நடைமுறை என்னவென்று தெரியாமல், ஒரு அரசியல் கட்சி என்றில்லாமல் திரைப்படத் துறையிலிருந்த அதே எண்ணத்திலேயே இன்றைக்கு ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கின்ற காரணத்தினால், அவர்கள் கூட்டணிக் கட்சியினுடைய எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொள்வார்கள், பொதுமக்களுடைய எதிர்ப்பையும் சம்பாதித்துக் கொள்வார்கள் என்ற காரணத்தினால்தான் இன்றைக்கு எங்கள் தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்கள் இந்த கருத்தைத் தெரிவித்திருக்கிறார்.
கேள்வி: இப்ப நீங்க சொல்றீங்க, கூட்டணிக் கட்சியினுடைய எதிர்ப்பை அவர்கள் சம்பாதிச்சுக்கிறாங்கன்னு. இப்ப வந்து திமுக தலைமையிலான கூட்டணியிலிருந்துதான் இந்த எட்டு எம்.எல்.ஏக்களுடைய உதவி கிடைச்சிருக்கு, காங்கிரஸ் தனியா போனதுனாலயும். இப்ப ஒருவேளை திமுக எதிர்ப்பு நடவடிக்கையை அவர்கள் தொடர்ந்து பண்ணிட்டு இருக்கும்போது, இவர்கள் தங்களுடைய ஆதரவை வாபஸ் வாங்குவதற்கு வாய்ப்புகள் இருக்கா?
பதில் (சிவசங்கர்): இல்ல, அவர்களைப் பொறுத்தவரை மிகத் தெளிவாகச் சொல்லியிருக்காங்க, இங்கே குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக்கூடாது, பாஜகவுடைய எண்ணம் நிறைவேறக்கூடாது என்பதற்காகத்தான் சொல்லியிருக்காங்க. ஆனால் பாஜக செய்கின்ற செயலையே அவர் விஜய் செய்ய முனைந்தால், அவர்களுடைய எதிர்ப்பை அவர் சம்பாதித்துக் கொள்ள வேண்டிய நிலைதான் வரும். என தெரிவித்தார்.
அப்போது ஒன்றிய செயலாளர்கள் மதியழகன், அழகு.நீலமேகம், ராஜேந்திரன், லப்பைக்குடிக்காடு பேரூர் செயலாளர் ஜாஹீர்உசேன், ரசூல் அஹமது உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497