Perambalur: Geographical indication for Chettikulam small onion! Farmers will get additional price!
பெரம்பலூர் மாவட்டத்தில் முக்கிய பயிராக பயிரிடப்படும் சின்ன வெங்காயம் சுமார் 7,000 ஹெக்டர் பரப்பளவில் பயிரிடப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பெரம்பலூர் மற்றும் ஆலத்தூர் வட்டாரங்களில் அதிக பரப்பளவில் சின்ன வெங்காயம் பயிரிடப்படுகிறது. ஆலத்தூர் வட்டம் செட்டிக்குளம் கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் விளைவிக்கப்படக்கூடிய வெங்காயம் தனி சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் செட்டிகுளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மண் அதிக கந்தகத் தன்மை நிறைந்ததாக இருப்பதால் இங்கு விளைவிக்கப்படும் சின்ன வெங்காயம் நல்ல சிவப்பு நிறத்திலும், அதிக காரத்தன்மையுடனும் இருப்பதோடு அளவிலும் பெரியதாக உள்ளது. இத்தகைய சிறப்பு தன்மைகளுடன் உள்ளதால் இங்கு விளைவிக்கப்படும் வெங்காயம் அதிக நாட்கள் கெட்டுப் போகாமலும் /வற்றிப் போகாமலும் இருக்கிறது. இப்பகுதி வெங்காயத்தை சாம்பாருக்கு பயன்படுத்தும் போது அதிக சுவை கிடைப்பதாக நுகர்வோர்களால் தெரிவிக்கப்படுகிறது .
சேலம் மாவட்டம் மற்றும் அருகிலுள்ள மற்ற மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் செட்டிக்குளத்தில் இருந்து விதைக்காகான வெங்காயம் வாங்கிச் செல்லும் சூழல் நிலவி வருகிறது. இத்தனை சிறப்பு வாய்ந்த செட்டிகுளம் சின்ன வெங்காயம் தனி அங்கீகாரம் பெற வேண்டும் என்ற நோக்கில் வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை மூலமாக புவிசார் குறியீடு பெறுவதற்கான முயற்சி 2022 ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. இதன் தொடக்கமாக சின்ன வெங்காயம் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் சங்கம் உருவாக்கப்பட்டு தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டம் 1975 (தமிழ்நாடு சட்டம் 27 of 1975) கீழ் 02. 06. 2022 அன்று பதிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக மதுரையில் செயல்பட்டு வரக்கூடிய வேளாண் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு மையம் (MABIF) வழிகாட்டுதலோடு சின்ன வெங்காயத்திற்கான புவிசார் குறியீடு பெறுவதற்காக சின்ன வெங்காயம் உற்பத்தியாளர்கள் விவசாயிகள் சங்கம் மூலம் விண்ணப்பிக்கப்பட்டது .சங்கத்தின் தலைவர், செயலாளர், பொருளாளர் அடங்கிய குழு பல கட்ட நேர்காணல்களில் கலந்துகொண்டு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து, செட்டிகுளம் சின்ன வெங்காயத்தின் சிறப்புகளை விளக்கினர். இத்தனை முயற்சிகளால் இன்று செட்டிகுளம் சின்ன வெங்காயம் என புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளது.
இனிவரும் காலங்களில் மதுரை மல்லி, திருநெல்வேலி அல்வா போன்று செட்டிகுளம் சின்ன வெங்காயமும் இந்திய அளவிலும் உலக அளவில் தனித்தன்மையோடு புகழ் பெறக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.எனவே பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள வெங்காயம் உற்பத்தி செய்யக்கூடிய விவசாயிகள் அவர்களுடைய விளைப் பொருளுக்கு அதிக வரவேற்பை பெற்று அதிக லாபமடைய கூடிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும், சின்ன வெங்காயம் குறித்த தகவல்கள்: சின்ன வெங்காயத்தில் நம் உடல் ஆரோக்கியத்திற்கு தேவையான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் நிறைந்துள்ளது. இதில் அடங்கியுள்ள ஆண்டி ஆக்ஸிடண்கள் இதய நோய்கள் மற்றும் அலர்ஜி போக்குகிறது. எனவே, சின்ன வெங்காயத்தை தினசரி உணவில் சேர்த்து வரும்போது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த முடியும். பொதுவாக இந்திய சமையல்களில் சின்ன வெங்காயம் என்பது மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. சின்ன வெங்காய மருத்துவ குணங்களை கருத்தில் கொண்டு நம் முன்னோர்கள் பாரம்பரியமாக பயன்படுத்தி வருகின்றனர்.
உலக அளவில் சிறந்த ஆரோக்கியமான உணவாக கருதப்படுகிறது. இந்தியாவில் சின்ன வெங்காய சாகுபடியில் தமிழ்நாடு ஒன்பதாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் 28,357 எக்டர் சின்ன வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. அதில் பெரம்பலூர் மாவட்டம் சுமார் 8,000 ஹெக்டர் சின்ன வெங்காய சாகுபடி செய்யப்பட்டு முதலிடம் வகிக்கிறது. பெரம்பலூர் மாவட்டம் சின்ன வெங்காய சாகுபடிக்கு குறிப்பாக வெங்காயத்தின் தரம் மற்றும் உற்பத்திக்கு பெயர் போனதாகும்.
மூன்று பருவங்களான காரீப் (ஜூன் – செப்டம்பர்), ரபி (சிறப்பு பருவம் – அக்டோபர்- நவம்பர்), ரபி (டிசம்பர் – பிப்ரவரி) -ல் அதிகப்படியாக சாகுபடி செய்யப்படுகிறது. குறிப்பாக ஆலத்தூர் வட்டாரத்தில் செட்டிக்குளம் குறுவட்டத்தில் இரூர், செட்டிக்குளம், பாடாலூர், நக்கசேலம், சிறுவயலூர், நாட்டார்மங்கலம், எலந்தலப்பட்டி மற்றும் பெரம்பலூர் வட்டாரத்தில் குரும்பலூர் குறுவட்டமான அம்மாபாளையம், களரம்பட்டி, இலாடபுரம், மேலப்புலியூர், சத்திரமனை, பொம்மனப்பாடி, சிறுவாச்சூர், எசனை ஆகிய கிராமங்களில் பிரதான பயிராக வருடம் முழுவதும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் சின்ன வெங்காயம் திருச்சி காந்தி சந்தை, ஒட்டன் சத்திரம் சந்தை, சென்னை கோயம்பேடு சந்தை மற்றும் தமிழ்நாடு முழுவதும் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயம் அன்றாட தேவைக்களுக்கு மட்டுமில்லாமல் தமிழ்நாடு மட்டுமல்லாது பிற மாநிலங்களுக்கும் பெரம்பலூர் மாட்டத்திலிருந்து விதை வெங்காயம் கொள்முதல் செய்யப்படுகிறது.
பெரம்பலூர் மாவட்டத்தில் விளையும் வெங்காயத்தில் 18 முதல் 20 தாள்கள் வருகின்றது. அதனால் அதன் காரத்தன்மை அதிகம். புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதால் செட்டிக்குளம் வெங்காயத்திற்கென்று நல்ல விலை கிடைக்கும், அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படும்.