Perambalur: Hotel owner and family stage dharna at the Collector’s office, alleging that rocks were thrown at the hotel’s entrance, stairs were demolished, and rowdies were sent to issue death threats.

பெரம்பலூர் 4 ரோட்டில் ஹோட்டல் கடை நடத்தி வருபவர் அன்புச் செழியன் மனைவி நித்யா (46). இவருக்கு பகுதியில் தனக்கு சொந்தமான இடத்தில் 4 ரோடு மேற்குப் பகுதியில் சுமார் 25 ஆண்டுகளாக பாலாஜி பவன் என்ற பெயரில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், நித்யாவின் பக்கத்து கட்டிடத்துக்காரரும், பால் வியாபாரியுமான அருமடல் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் தனது கட்டிடத்தையொட்டி தென்மேற்கு பகுதியில் செல்லும் நீர்வழித்தடத்தை, நித்யா குடும்பத்தின் மீதுள்ள முன்விரோதம் காரணமாக தன்னிடம் பட்டா உள்ளது என கூறியும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கிடையே ஒருசில மாதங்களில் நான்கு ஐந்து முறை பத்திரங்கள் எழுதி, பெயர் மாற்றம் செய்ததோடு, கடந்த 16ஆம் தேதி நள்ளிரவில் நித்யா நடத்தி வரும் உணவகம் முன்பு பாறைகளை கொட்டி உணவகத்தின் உள்ளே செல்ல முடியாதவாறு ஆக்கிரமித்ததாகவும், வழக்கம் போல் மறுநாள் காலை ஹோட்டல் திறக்க வந்த போது, கற்கள் கொட்டப்பட்டுள்ளதை கண்டு அதிர்ச்சடைந்த நித்யா, தனது கட்டிடத்தின் முன் ஏன் இடையூறு ஏற்படுத்தி வருகிறீர்கள் என செல்வகுமாரிடம் கேட்ட நிலையில் அவர் பெரம்பலூரில் உள்ள பிரபல ரவுடிகளுடன் சேர்ந்து மிரட்டியதோடு, உன்னை குடும்பத்தோடு கொலை செய்து விடுவேன் என மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனால் பயந்து போன நித்யா சம்பவம் குறித்து பெரம்பலூர் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் நடவடிக்கையில் கடும் தாமதம் ஏற்பட்ட நிலையில், போலீஸ் எஸ்.பி ஆதர்ஷ் பசேராவிடமும் நித்யா கொடுத்த புகாரின் பேரில், கட்டிடத்தின் முன் பகுதியில் கொட்டப்பட்ட பாறைகளை அகற்றும் படி செல்வகுமார் தரப்பிற்கு அறிவுறுத்தியோடு, சம்பந்தப்பட்ட இடத்தை வருவாய்த்துறை மூலம் உரிய அளவீடு செய்து சுமூக தீர்வு காணுங்கள் என கூறியதாக தெரிகிறது.
அதன் பேரில் சம்பந்தப்பட்ட இடத்தில் கொட்டி இருந்த பாறாங்கற்களை கடந்த 19ஆம் தேதி செல்வகுமார் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் அகற்றி லாரியில் ஏற்றி அப்புறப்படுத்தியுள்ளனர். அப்போது நித்தியாவின் ஹோட்டலுக்குள் சென்று வர பயன்படுத்தி வந்த படிக்கட்டுகளையும் இடித்து அப்புறப்படுத்தி கட்டிடத்திற்குள் செல்ல முடியாமல் தடுத்துள்ளனர்.
ஹோட்டலுக்குள் சென்று வர பயன்படுத்தி வந்த படிக்கட்டுகள் இடித்த தகவலை போலீசாருக்கு தெரிவித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால், பெரும் மன உளைச்சலுக்குள்ளான நித்யா படிக்கட்டுகளை இடித்து பாதையை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய பதாகையை ஏந்தியபடி தனது கணவர் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுடன் இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தரையில் அமர்ந்து, ரவுடிகளிடமிருந்தும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்தும் பாதுகாப்பு வேண்டுமென வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.
இதனை அடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் நித்தியா உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை சமரசம் செய்து கலெக்டரிடம் புகார் மனு அளிக்க அறிவுறுத்தினர்.
அதன் பேரில் கலெக்டர் மிருணாளினியிடம் நித்யா குடும்பத்தினர் புகார் தெரிவித்தனர். புகாரின் பேரில், நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட வருவாய்த் துறையினர் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு, உரிய நடவடிக்கை எடுக்க கலெக்டர் உத்திரவிட்டார்.
முன்விரோதம் காரணமாக பால் வியாபாரி ஒருவர் ஹோட்டல் முன்பு பாறைகளை கொட்டி பாதையை அடைத்ததோடு உணவகத்திற்கு செல்லும் படிக்கட்டுகளையும் ரவுடிகளைக் கொண்டு இடித்து அப்புறப்படுத்தி உணவாக உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் பெரம்பலூர் நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.










kaalaimalar2@gmail.com |
9003770497