Perambalur: How will the AIADMK, which is allied with the BJP that continuously betrays Tamil Nadu, ever win? Congress party state president Selva Perunthagai’s interview!

செல்வபெருந்தகை இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் மற்றும் பெரம்பலூர் முன்னாள் மாவட்ட தலைவர் மதன் (எ) மதனகோபாலின் தந்தையும், மறைந்த முன்னாள் காங்கிரஸ் மாவட்ட செயலாளருமான தந்தை ரத்தினசாமியின் படத்திறப்பு விழாவிற்கு நேற்றிரவு எளம்பலூர் சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு வருகை தந்த காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை படத்தை திறந்து வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:
மதன் அவர்களுடைய தந்தை இயற்கை எய்தினார். அதற்கு துக்கம் விசாரிப்பதற்கும், படத்திறப்பு நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டிருக்கிறோம். இன்று (நேற்று) திருச்சியில், ‘100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மீண்டும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம் மீண்டும் பழைய நிலையில் மாற்ற வேண்டும், சோனியா காந்தி கொண்டு வந்த, உலகம் போற்றுகின்ற இந்தத் திட்டத்தைச் சிதைக்கக் கூடாது என்று மோடி அரசைக் கண்டித்து மாபெரும் பாதயாத்திரை மேற்கொண்டோம்.” என தெரிவித்தா அவரிடம் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் பதிலளித்தார்.
கேள்வி (செய்தியாளர்கள்) : ஆட்சியில் பங்கு பற்றிய உங்க நிலைப்பாடு என்ன? 2026 சட்டமன்றத் தேர்தல்ல?
பதில் (செலவப்பெருந்தகை) : இதெல்லாம் எங்க அகில இந்தியத் தலைமை கிட்ட அதிகாரத்தைக் கொடுத்திருக்கோம். அகில இந்தியத் தலைமை முடிவு செய்யும்.!
கேள்வி: ஒன்றரை மணி நேரத்துல 10,000 பேர் விருப்ப மனு கொடுத்திருக்கிறதா தமிழக வெற்றிக் கழகம் சொல்லியிருக்காங்க. இது ரொம்ப சூறாவளி வேகத்துல போற மாதிரி தெரியுது, இத எப்படி பாக்குறீங்க?
பதில்: நான் பாக்கல, அதைப் பாத்துட்டுச் சொல்றேன்.
கேள்வி : எத்தனை சீட் கேட்கப் போறீங்க சட்டமன்றத் தேர்தல்ல?
பதில் : அதையும் எங்க அகில இந்தியத் தலைமை முடிவு பண்ணும்.
கேள்வி : மாநிலத் தலைவரா நீங்க என்ன சொல்ல வர்றீங்க?
பதில் : மாநிலத் தலைவரா, அகில இந்தியத் தலைமை என்ன வழிகாட்டுதோ, மாநிலத் தலைவரா நான் செயல்படுவேன்.
கேள்வி: இப்போ மோடி வந்துட்டுப் போனாரு, அதுக்கப்புறம் அமித்ஷா வரப்போறாரு, அடுத்து மத்திய அமைச்சர்கள் தமிழகத்தைக் குறி வச்சு வந்துட்டு இருக்காங்க
பதில்: இந்தியாவில் இருக்கிற ஒன்றிய அமைச்சர்கள் எல்லாரும் படையெடுக்கட்டும். பா.ஜ.க ஆளும் மாநில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ எல்லாம் படையெடுக்கட்டும். தமிழ்நாட்டு மண் ஒருபோதும் பா.ஜ.க கூட்டணிக்கான மண் இல்லை. பா.ஜ.க-வை ஒருபோதும் தமிழ் மண்ணில் கால் ஊன்ற தமிழ் மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.
கேள்வி: கிட்டத்தட்ட 2வது இடத்துக்கு வந்துட்டாங்கண்ணே பா.ஜ.க. அ.தி.மு.க முடிஞ்சு போச்சுங்கறாங்க!
பதில்: அ.தி.மு.க-வை முழுங்குனது யாரு? நீங்களே ஒத்துக்கறீங்க! அ.தி.மு.க முழுங்கப்பட்டதுன்னு. அது ஒரு கூட்டணியா? கூட்டணிக் கட்சிகளை முழுங்குவது கூட்டணி தர்மமா? எங்க கூட்டணி 45 விழுக்காட்டுக்கு மேல் வாக்கு வங்கியை இன்று வரை பெற்றிருக்கு. இது 50 விழுக்காடாக மாறுவதற்கு வாய்ப்பிருக்கு. தமிழ்நாட்டிற்குத் தொடர்ந்து துரோகம் செய்கின்ற பா.ஜ.க-வுடன் சேர்ந்து இருக்கின்ற அ.தி.மு.க எப்படி வெற்றி பெறும்? ஏற்கனவே இருந்த தமிழ்நாட்டின் உரிமைகள் – நீட், ஜிஎஸ்டி, உதய் மின்திட்டம் – எல்லாத்தையும் தாரை வார்த்துக் கொடுத்துட்டு, சொல்ற இடத்துல எல்லாம் கையெழுத்துப் போட்டுட்டு வந்துட்டு, இப்பவும் முகமூடி அணிந்து கொண்டு மோடி சொல்றதைக் கேக்குறவங்களை எப்படி நம்புவோம்? முகமூடி அணிந்து செயல்படுபவர்களைத் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். அவர்களை விரட்டியடிப்பார்கள். ஒருபோதும் வாக்கு கேட்டுப் போகவே முடியாது.
கேள்வி: நீட் திட்டத்தைக் கொண்டு வந்ததே காங்கிரஸ் ஆட்சிதான், அதுக்குக் கையெழுத்துப் போட்டது
பதில் : நாங்க கொண்டு வரல, காங்கிரஸ் ஒருபோதும் நீட்டைக் கொண்டு வரல. அது மெடிக்கல் கவுன்சில் ஆஃப் இந்தியா அந்த ப்ரோபோசலை வச்சாங்க. உச்ச நீதிமன்றத்துல தடையாணை வாங்கிட்டோம். மோடி அரசு வந்த பிறகுதான் ‘சங்கல்ப்’ என்ற ஒரு என்.ஜி.ஓ மூலமா மனுதாரராப் போட்டு நடத்துவோம்னு கொண்டு வந்தாங்க. கொண்டு வந்த பிறகு கூட அம்மையார் ஜெயலலிதா நீட்டைத் தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்கவில்லை. ‘யூனிஃபார்ம் சிலபஸ்’ – ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் இந்தியா முழுவதும் வரும்போது தான் நீட்டை அனுமதிக்க முடியும்னு சொன்னாங்க. இப்ப இருக்கிற நட்டா பிஜேபி தலைவரா இருந்தவர் தான் அப்போ சுகாதாரத் துறை அமைச்சரா இருந்தாரு. அப்போ சொன்னாங்க அனுமதிக்க மாட்டோம்னு, அப்புறம் அனுமதிச்சது யாரு? எடப்பாடி பழனிசாமி தான் நீட்டை அனுமதிச்சாரு. அம்மையார் ஜெயலலிதா உயிரோடு இருக்குற வரைக்கும் அனுமதிக்கல. நீட், ஜிஎஸ்டி, உதயமின் திட்டம் எதிலயும் கையெழுத்துப் போடல. எடப்பாடி பழனிசாமி தான் கொண்டு வந்தாரு. யாருக்காக? மோடி சொன்னதைக் கேட்டுக்கொண்டு வந்தாரு. எத்தனை குழந்தைகள் தற்கொலை பண்ணிக்கிட்டாங்க? இதுக்கெல்லாம் மோடியும் எடப்பாடியும் பொறுப்பேற்பாங்களா? உண்மையை மறைச்சுடணும், முழுப் பூசணிக்காயைச் சோத்துல மறைக்கப் பாக்குறாங்க. மறைக்க முடியாது என தெரிவித்தார்.
அப்போது, காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள், மதன் மற்றும் அவரது குடும்பத்தினர், தங்கவேல், ரெங்கராஜ், ராஜீவ்காந்தி, விசிக கிட்டு உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497