Perambalur: Kelaperambalur Lake Inflow Channel dredging work; Collector inaugurates!

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் வட்டத்தில், நீர்வளத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கீழப்பெரம்பலூர் ஏரிக்கு செல்லும் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணியினை கருப்பட்டாங்குறிச்சி கிராமத்திலிருந்து, கலெக்டர் ச.அருண்ராஜ் தொடங்கி வைத்தார்.
கீழப்பெரம்பலூர் ஏரியின் பரப்பளவு 17.81 ஹெக்டேர். இந்த ஏரிக்கு நீர் வரும் வரத்து வாய்க்கால் முழுவதும் சீமைகருவேல மர முள்முட்புதர்கள் மண்டி, மண் மேடிட்டு தூர்ந்து உள்ளதால் நீர் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் விவசாய பெருமக்கள் ஏரியில் வளர்ந்துள்ள முட்புதர்கள் மற்றும் சீமை கருவேல மரங்களை அகற்றி தருமாறு விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில் கலெக்டர் அருண்ராஜ், சமூக பணி மற்றும் தன்னார்வலர் பணியில் ஈடுபாடு கொண்டவர்களிடம் இப்பணி குறித்து தெரிவித்ததன் அடிப்படையில், மோகன் ஒப்பந்ததாரர் என்பவர் தன்னார்வலர் பணியின் கீழ் 3.5 கி.மீ தூரமுள்ள வாய்க்காலை சுமார் ரூ.8 லட்சம் மதிப்பில் முட்புதர்கள் மற்றும் சீமை கருவேல மரங்கள் அகற்றும் பணி மற்றும் ஏரியை தூர்வாரி கரையைப் பலப்படுத்தி தருவதாக ஒப்புதல் பெறப்பட்டு தூர்வாரும் பணியினை கலெக்டர் தொடங்கி வைத்தார்.
இதனால், ஏரியை சுற்றியுள்ள 40 ஏக்கர் விவசாய நிலம் மற்றும் திறந்தவெளி கிணறு பயன் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.தேவநாதன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) குணசேகரன், நீர்வளத்துறை உதவி பொறியாளர் தினகரன், வேப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சேகர், அறிவழகன், குன்னம் வட்டாட்சியர் சின்னதுரை, உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497