Perambalur: Man who married into another community dies mysteriously! Honor killing?!! Road blockade demanding police to take appropriate action; Protest against refusing to take the body!!
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேடு அருகே உள்ள ரஞ்சன்குடி கிராமத்தில், நேற்று வினோத் (30), என்ற வாலிபர் அவரது வீட்டிற்குள் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார். தகவலின் பேரில் வினோத்தின் சடலத்தை கைப்பற்றி உடற் கூறு ஆய்வுக்காக மங்களமேடு போலீசார் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து 174 என வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், பட்டியலின சமூகத்தை சேர்ந்த கற்பகம் என்ற பெண்ணை மாற்று சமூகத்தை சேர்ந்த வினோத் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்னர் காதல் திருமணம் செய்து கொண்டதால், தங்களது சமூகத்திற்கு பெரும் தலைகுனிவை ஏற்படுத்தி விட்டாய் என வினோத்தின் உறவினர்களான குபேந்திரன் உள்ளிட்ட அவனது கூட்டாளிகள் 5 பேர் நேற்று அப்பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சென்ற வினோத்தை வீண் வம்பு செய்து அடித்து கொலை செய்து விட்டதாக அவரது குடும்பத்தார் தெரிவித்த புகாரின் பேரில் போலீசார் கொலை வழக்கு பதிவு செய்யவில்லை! என குற்றம் சாட்டி மங்களமேடு கிராமத்தில் வினோத்தின் உறவினர்கள் இன்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை அறிந்த மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிட செய்தனர்.
இந்நிலையில் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு வந்த வினோத்தின் குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்கள் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தியும் வினோத்தின் சடலத்தை வாங்க மறுத்து போலீசார் உள்ளிட்ட வருவாய்த் துறையினரிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு நிலவியது.
போலீசார் மற்றும் வருவாய் துறை உள்ளிட்ட அதிகாரிகளின் சமரசத்தை ஏற்க மறுத்த வினோத்தின் உறவினர்கள் கொலை வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை வினோத்தின் சடலத்தை வாங்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்து விட்டனர். இந்த போராட்டத்தில் பெரம்பலூர் மாவட்ட விசிக மேற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் ரத்தினவேல், முன்னாள் மாவட்ட செயலாளர் வீர.செங்கோலன் உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட உறவினர்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.