Perambalur: Members of the public, volunteers, and voluntary organizations willing to help remove Seemai Karuvelam trees are invited to contribute; call from the Collector!
பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், நீதி மன்ற உத்தரவின்படி, சீமை கருவேல மரங்களை அகற்றுவது குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் கலெக்டர் ஷரண்யா தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது அவர் தெரிவித்ததாவது:
நீர்வள ஆதாரத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள நீர்நிலைகளில் சீமை கருவேல மரங்கள் கண்டறிந்து முன்னுரிமை அடிப்படையில் அகற்றிடவும் மற்றும் அனைத்து துறை பராமரிப்பில் உள்ள அரசு புறம்போக்கு நிலங்களிலுள்ள சீமை கருவேல மரங்களை திட்டம் வகுத்து அகற்றிடவும் தனியார் நிலங்களிலுள்ள சம்மந்தப்பட்ட பட்டாதார்ர்களுக்கு அறிவிப்பு வழங்கி அகற்றிட போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
நிலத்தில் ஆழமாக சென்று பரவும் இம்மரங்களின் வேர்கள் நிலத்தடி நீரை வெகுவாக உறிஞ்சிவிடுவதால் மற்ற செடி கொடிகள் மற்றும் மரங்கள் வளர்வது பாதிக்கப்படுவதோடு, வறட்சியும் ஏற்படுகிறது. மேலும், இம்மரங்கள் நம் சுற்றுச் சூழலில் வெப்பநிலையை அதிகரிக்கிறது. இவை வெளியிடும் கதிர்வீச்சினால் சுற்றியுள்ள உயிரினங்களுக்கு பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன. உதாரணமாக கால்நடைகள் இம்மரங்களின் கீழே தொடர்ந்து கட்டப்படும் போது, மலட்டுத்தன்மை ஏற்படுவதாக கண்டறிந்துள்ளனர்.
வறட்சியைத் தாங்கக்கூடிய முட்களோடு, நீரை உறிஞ்சி நீர் வளத்தைப் பாதிக்கும் இவை சமூகத்தின் வளத்திற்கு சவாலாக அமைகிறது. பொதுவாக நன்மை தருபவற்றை வளர்ப்பது நமக்கு எப்போதும் சவாலாகவே இருக்கும். ஆனால், தீமை செய்பவை எதுவானாலும் அது வேகமாக பரவும் என்று சொல்வார்கள். அதுபோல, சீமை கருவேல மரங்களும் எளிதில் பரவக்கூடிய. இந்த கருவேலம் மரங்களின் காய்களை சிலர் விலங்குகளுக்கு உணவாக அளிக்கிறார்கள். இதன்மூலம் விலங்குகளின் கழிவுகள் மூலம் இம்மரங்கள் விரைவில் பெருகுகின்றன. இதுகுறித்த விழிப்புணர்வை நாம் கால்நடை வளர்ப்பவர்களிடம் ஏற்படுத்த வேண்டும்.
இம்மரங்களின் தீமைகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்துவதோடு, நேரடியாக களத்தில் இறங்கி இவற்றை வெட்டவும் தேவையிருக்கிறது. மேலும், சீமை கருவேல மரங்கள் அகற்றப்பட்ட நீர்நிலைகளில் சுற்றுச்சூழல் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் இயற்கை சார்ந்த உள்நாட்டு மரங்களை நட்டு பராமரிக்கப்பட வேண்டும். இப்பணிக்கு ஆர்வமுள்ள தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் அறிவுருத்தப்பட்டுள்ளது. மேலும், சீமை கருவேல மரங்களை அகற்றும் பணிகளுக்கு விருப்பமுள்ள பொதுமக்கள், தன்னார்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்தை அணுகி தங்களது பங்களிப்பை வழங்கலாம். பொது மக்கள் குடியிருப்பு பகுதிகள், தெருக்களில், கிராமங்களில் உள்ள சீமை கருவேல மரங்களை வெட்டி அகற்றுவதோடு, பரவாமல் தடுத்து விட்டால் நாம் சமூகத்திற்கு செய்யும் மிக முக்கிய செயலாக அது இருக்கும் என கலெக்டர் தெரிவித்தார். இதில் அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497