Perambalur Motorcycle Showroom Rs. 17 lakh robbery! The police are actively searching for the mysterious persons
பெரம்பலூர் பரபரப்பான சாலையில் உள்ள பிரபல மோட்டார் சைக்கிள் ஷோரூமில், நேற்று தீபாவளி விற்பனை முடிந்து வைத்து சென்ற ரூ. 17 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கள்ளக்குறிச்சி, அண்ணா நகரை சேர்ந்தவர் துரை (51), இவர் பெரம்பலூர் பாலக்கரை அருகே பிரபல மோட்டார் சைக்கிள் கம்பனியின் விற்பனை மையத்தை நடத்தி வருகிறார். இன்று காலை ஷோ ரூம் பணியாளர்கள் வந்து கடையை திறந்து வைத்து கொண்டிருந்தனர். அப்போது, உரிமையாளர் அறை உடைக்கப்பட்டு கிடப்பதை சென்று பார்த்த போது நேற்று தீபாவளியை முன்னிட்டு விற்பனை தொகை ரூ. 17 லட்சத்தை காணாமல் போயிருப்பது தெரிய வந்தது. இது குறித்து, பெரம்பலூர் போலீசாருக்கு கொடுத்த தகவலின், சம்பவ இடத்திற்கு இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில் மர்மநபர்கள், ஜன்னல் கம்பிகளை அறுத்தும், உடைத்தும், உள்ளே புகுந்த அவர்கள் அங்கிருந்த சி.சி.டிவி கேமராக்களுக்கு செல்லும், டேட்டா கேபிள்களையும், இன்டர்நெட் கேபிள்களை துண்டித்துள்ளனர். பின்னர், ஓனர் ரூமில் இருந்த பணத்தையும் எடுத்துக் கொண்டு, அங்கு பூஜை செய்து வைக்கப்பட்டிருந்து ஸ்வீட்டையும் சாப்பிட்டு சென்றிருப்பதும் தெரியவந்தது. மேலும், ஜன்னல் கம்பிகளை அறுக்க பயன்படுத்திய ஆஷா பிரேம் பிளேடுகள், கம்பிகள், கடப்பாரை ஆகியவற்றை அங்கிருந்த கழிப்பறை கோப்பையில் வீசி சென்றதும் தெரியவந்தது.
திட்டமிட்டு இந்த கொள்ளையில் மர்ம நபர்கள் முன்னதாகவே வந்து, கடையை நோட்ட மிட்டு நன்கு அறிந்தவர்களாக இருந்திருக்க வேண்டும் என்ற கோணத்திலும், தடய அறிவியல் மற்றும் அப்பகுதியில் இருக்கும் மற்ற கடைகளின் சி.சிடிவி கேமராக்களின் காட்சிப் பதிவுகளை வைத்தும் போலீசார் கொள்ளையர்களை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.