Perambalur: No change in the situation despite the change of government; MRF workers continue their protest—Communist Party alleges.

தமிழ்நாடு முதலமைச்சர் தலையிட்டு தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது, இது குறித்து பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் பெ.ரமேஷ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது;
பெரம்பலூரில் செயல்பட்டு வரும் எம்.ஆர்.எப் தொழிற்சாலையில் பணிபுரியும் தொழிலாளர்கள், கடந்த 30 மாதங்களாக வழங்கப்பட வேண்டிய ஊதிய உயர்வை நிலுவைத் தொகையுடன் உடனடியாக வழங்க வேண்டும், ஒப்பந்த தொழிலாளர்களை பணியமர்த்தி சட்டவிரோத உற்பத்தியில் ஈடுபடுவதை கைவிட வேண்டும், விபத்துக்குள்ளாகும் தொழிலாளர்களின் முழு மருத்துவச் செலவையும் நிர்வாகமே ஏற்க வேண்டும், தொழிலாளர் நலச் சட்டங்களை முழுமையாக அமல்படுத்த வேண்டும், பயிற்சிக் காலம் 2 ஆண்டுகள் முடிந்தும் நிரந்தரப் பணி வழங்காமல் உழைப்பைச் சுரண்டும் போக்கை கைவிட வேண்டும், சுகாதாரமற்ற உணவு வழங்குவதை கைவிட்டு தரமான உணவு வழங்கவேண்டும், சுகாதாரமான கழிப்பிட வசதிகளை ஏற்படுத்த வேண்டும், பெண் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், கட்டாய உற்பத்தியில் ஈடுபடுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி போராடி வருகின்றனர்.
இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம், மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம், வேலைநிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக வழிப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். தற்போது இந்தப் போராட்டம் 6 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதன் தொடர்ச்சியாக தொழிலாளர்கள் ஜனநாயக வழியில் காத்திருப்பு போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
ஆனால், மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தொழிலாளர் நலத்துறை ஆகியவை தொழிலாளர்களை அழைத்து பேசி, தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு எதிராக செயல்படும் எம்.ஆர்.எப் நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுத்து பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக, காத்திருப்பு போராட்டத்திற்கு அனுமதி மறுத்து, போராட்டத்திற்கான இடம் வழங்கியவர்களுக்கும் அழுத்தம் கொடுத்து இடம் வழங்கக் கூடாது என நிர்ப்பந்திப்பது நல்லாட்சிக்கு அழகல்ல. ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என்பதையே இந்த நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன.
எனவே, எம்.ஆர்.எப் தொழிலாளர்களின் பிரச்சினையில் தமிழ்நாடு முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு, தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தொழிலாளர் நலச் சட்டங்களுக்கு எதிராக தொழிலாளர்களை பாதுகாப்பற்ற முறையில் நடத்தும் எம்.ஆர்.எப் நிறுவனத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, பாதுகாப்பான வேலைச் சூழலை உருவாக்க வேண்டும் என வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 11.07.2026 (சனிக்கிழமை) மாலை 4.00 மணிக்கு பாடாலூர் பேருந்து நிறுத்தத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து ஜனநாயக இயக்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தொழிலாளர்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் என அதில் தெரிவித்துள்ளார்.










kaalaimalar2@gmail.com |
9003770497