Perambalur: Pongal gift to be distributed to 193,921 ration cardholders from tomorrow!

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது. அப்போது அவர் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர், பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அரிசி பெறும் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பாக 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்பு மற்றும் ரொக்கத்தொகையாக ரூ.3000 மற்றும் வேட்டி மற்றும் சேலைகள் வழங்க ஆணையிடப்பட்டுள்ளார். இந்த பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் வேட்டி மற்றும் சேலைகள் அனைத்து நியாய விலைக் கடைகளிலும் 08.01.2026 முதல் காலை 9.00 மணி முதல் 1.00 வரையிலும் பிற்பகல் 2.00 மணி முதல் 6.00 வரையிலும் பகுதி வாரியாக வழங்கப்பட்டுள்ள டோக்கன் அடிப்படையில் வழங்கப்படும். இதற்காக 09.01.2026 நியாய விலைக் கடைகளுக்கு வேலை நாளாக அரசு அறிவித்துள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களும் (1,93,921 குடும்ப அட்டைதாரர்கள்) தங்கள் குடும்ப அட்டையில் இணைக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடைகளில் மின்னணு குடும்ப அட்டையுடன் குடும்ப அட்டைதாரரோ அல்லது அந்த குடும்ப அட்டையில் இடம்பெற்றுள்ள யாரேனும் ஒரு குடும்ப உறுப்பினரோ தங்கள் டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் நியாயவிலைக் கடைக்கு சென்று விற்பனை முனைய இயந்திரத்தில் கைரேகை பதிவு செய்து தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் பொங்கல் வேட்டி மற்றும் சேலைகள் பெற்றுக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இப்பணியை கண்காணிக்க துணை ஆட்சியர் நிலையில் பொறுப்பு மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். குடும்ப அட்டைதாரர்கள் இது தொடர்பாக புகார்கள் / குறைபாடுகளுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறைக்கு 94454 76298 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என்பது குறித்து பொதுமக்களிடையே கொண்டு சேர்க்க வேண்டும். அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து திட்டமிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு சிறப்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கிடவேண்டும், என தெரிவித்தார். இதில்,அரசு பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!