Perambalur: Public and drunk people block road in protest against police who imposed fines during vehicle inspection!

பெரம்பலூர் அருகே போலீசார் போக்குவரத்து இடையூறாக வாகனங்களை மறித்து தணிக்கை செய்ததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டம், திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் இரூர் கிராமத்தில் கடந்த 6 மாதமாக மேம்பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதனால் மேம்பாலம் வழியாக வாகனங்கள் அனைத்தும், அருகே உள்ள சர்வீஸ் சாலையில் செல்ல போலீஸார் அறிவுறுத்தி உள்ளனர். மேம்பாலத்தின் கிழக்குப் பகுதியில் காரை பிரிவில் தினமும் மாலை நேரங்களில் பாடாலூர் போலீஸார் வாகன தணிக்கை சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த சர்வீஸ் சாலை வழியாக காரை, கொளக்காநத்தம், காரை, புதுக்குறிச்சி, தெரணி, இரூர் ஆகிய கிராமத்தை சேர்ந்த மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் காலை, மாலை நேரங்களில் இந்த சாலையில் கடும் போக்குவரத்து நேரிசல் ஏற்படும். இந்தநிலையில் இன்று மாலை காரை பிரிவில் பாடாலூர் போலீஸார் வாகனங்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது, போக்குவரத்து விதிமுறைகளை மீறி வாகனம் ஓட்டி வந்தவர்களிடம் அபராதம் விதித்து வசூல் செய்து வந்தனர். இதனால் சென்னை-திருச்சி சர்வீஸ் சாலையில் தீடீரென கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் போலீஸாரிடம் வாக்குவாதம் செய்ததுடன், சாலையை மறித்து போராட்டம் நடத்தினர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வாகன போக்குவரத்தும் சீரற்ற நிலைக்குள்ளானது. இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் மற்றும் பெரம்பலூர் போக்குவரத்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சு வார்த்தை நடத்தியதன் பேரில், போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து போக்குவரத்து சீரானது. அதிவிரைவுப் படை போலீசார் அப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். முன்னதாக, காரை பிரிவு சாலையில் உள்ள ஒயின் ஷாப்பில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டி வந்தவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், மதுக்கடையை வேறு பகுதிக்கு மாற்ற தரக்கோரியும் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497