Perambalur: Public protest buses despite pouring rain demanding road construction!
பெரம்பலூர் மாவட்டம்,, செட்டிகுளம் அருகே ஈச்சம்பட்டி கிராமத்தில் சாலை அமைத்து தரக்கோரி கிராம மக்கள் பஸ்சை மறித்து போராட்டம் நடத்தினர். கடந்த சில நாட்களுக்கு முன்பு செட்டிகுளம் ஊராட்சியில் இருந்து சாலை அமைக்கும் பணிகள் நடந்தது. செட்டிகுளத்தில் இருந்து ஈச்சம்பட்டி அருகே உள்ள கிராமம் வரை சாலை அமைக்கப்பட்டது. ஆனால் ஈச்சம்பட்டியில் சாலை அமைக்கவில்லை. அதாவது ஈச்சம்பட்டி, நக்கசேலம் ஊராட்சிக்கு வருவதால், சாலை அமைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஈச்சம்பட்டியை சேர்ந்த மக்கள் குண்டும், குழியுமான சாலையில் பயணிக்க வேண்டி உள்ளதால், அதிருப்தி அடைந்த கிராம மக்கள் ஊரக வளர்ச்சி துறையினரிடம் முறையிட்டனர். ஆனால், அவர்கள் நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தியடைந்த கிராம மக்கள் இன்று காலை ஒன்று திரண்டு அக்கிராமத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த ஒரு அரசு பஸ்சை கிராம பொதுமக்கள் சிறை பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி , போடப்படாமல் உள்ள 100 மீட்டர் சாலையை விரைந்து போட்டு தர நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என உறுதியளித்ததின் பேரில் கலைந்து சென்றனர்.