Perambalur: School Student Killed After Getting Trapped in Wheel of Tractor Illegally Transporting Silt!

பெரம்பலூர் மாவட்டம், கீழப்புலியூர் அருகே உள்ள நமையூர் கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட காவல் துறையினரின் கண்களில் மண்ணை தூவி 15 க்கும் மேற்பட்ட டிராக்டர்களில் கடந்த சில நாட்களாக ஒரு கும்பல் சட்ட விரோதமாக வண்டல் மண் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக தெரிகிறது.
இந்நிலையில், வழக்கம் போல் இன்று வண்டல் மண் கடத்தலில் ஈடுபடுத்தப்பட்ட நமையூர் கிராமத்தை சேர்ந்த கண்ணுசாமி என்பவரின் டிராக்டரை அதே ஊரை சேர்ந்த ஓட்டுனர் உரிமம் இல்லாத மதன்குமார் (21), என்ற வாலிபர் ஓட்டி வந்துள்ளார்.
ஏரியிலிருந்து வண்டல் மண்ணை ஏற்றிக் கொண்டு அதிவேகமாக டிராக்டரை ஓட்டிச் சென்ற போது, மதன்குமாருடன் டிராக்டரின் பக்கவாட்டு இருக்கையில் அமர்ந்திருந்த அதே ஊரை சேர்ந்த செல்வராஜ்-சாந்தி தம்பதியரின் மகனும், 11ஆம் வகுப்பு படித்து வரும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான நித்திஷ் என்ற 16 வயது சிறுவன் எதிர்பாராத விதமாக கிழே தவறி விழுந்து டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தான்!
இதனைக் கண்ட டிராக்டர் ஓட்டுனர் மதன்குமார் சிறுவன் நித்திஷின் சடலத்தை சாலை ஓரமாக கிடத்தி விட்டு அங்கிருந்து டிராக்டரை எடுத்துச் சென்று அதன் உரிமையாளர் வீட்டில் நிறுத்தி விட்டு தப்பி ஓடியதாக தெரிகிறது.
இதனிடையே நித்திஷ் உயிரிழந்த தகவல் அறிந்து அங்கு திரண்ட அவனது பெற்றோர் உள்ளிட்ட உறவினர்கள் அவனது உடலை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுததோடு, நித்திஷின் உயிரிழப்பிற்கு காரணமான வண்டல் மண் கடத்தல் கும்பல் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் சிறுவனின் உடலை வாங்க மறுப்போம் என்றும் வேதனை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.
இதற்கிடையே விபத்து பற்றி அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற மங்களமேடு போலீசார் வண்டல் மண் கடத்தல் கும்பல் மீதும் விபத்துக்கு காரணமானவர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்து, நித்திஷின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வண்டல் மண் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தின் சக்கரத்தில் சிக்கி வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மாணவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் அவனது குடும்பத்தார் உள்ளிட்ட உறவினர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது.











kaalaimalar2@gmail.com |
9003770497