Perambalur: Stalin’s health care medical camp; Minister Sivasankar provided welfare assistance!

பெரம்பலூர் அருகே உள்ள குரும்பலூர் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், கலெக்டர் ந.மிருணாளினி தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் ம.பிரபாகரன் முன்னிலையில் நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ திட்ட முகாம் நடந்தது.

குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட மக்களுக்கு, அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இந்த முகாமில் 17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவுகளை சார்ந்த மருத்துவர்களை கொண்டு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டது. மேலும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதற்கும், மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான அடையாள அட்டை வழங்குவதற்கும் சம்பந்தப்பட்ட துறை வாயிலாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம்முகாமினை பார்வையிட்ட போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர், மருத்துவ முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்ததோடு, தமிழ்நாடு முதலமைச்சர், தாங்கள் உங்கள் நலன் காத்திடும் வகையில், உங்கள் ஊருக்கே மருத்துவக் குழுவினைரை அனுப்பி வைத்து, எல்லா விதமான மருத்துவப் பரிசோதைனையும் செய்து உயர் சிகிச்சை தேவைப்படும் நபர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் உயர் சிகிச்சை வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த வாய்ப்பை மக்கள் நல்லமுறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

17 உயர் சிறப்பு மருத்துவ பிரிவு அரங்குகள் அமைக்கப்பட்டிருந்த முகாமில் முழு உடல் பரிசோதனை செய்த நபர்களுக்கான உடனடியாக மருத்துவ அறிக்கையினையும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 05 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டைகளும், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் தலா ரூ.2,000 மதிப்பில் 10 கர்ப்பிணித்தாய்மார்களுக்கு ரூ.20,000 மதிப்பீட்டிலான ஊட்டச்சத்து பெட்டகமும், தொழிலாளர் நலத்துறை சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 1 பயனாளிக்கு ரூ.20,000த்திற்கான திருமண உதவித்தொகைக்கான ஆணையும், கல்விக்கடனுதவி 1 பயனாளிக்கு ரூ.7,000மும், 1 பயனாளிக்கு ரூ.5,000ம், என மொத்தம் ரூ.52,000 மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் வழங்கினார்.

மாவட்ட சுகாதார அலுவலர் கீதா, பெரம்பலூர் மாவட்ட திமுக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன், பெரம்பலூர் ஒன்றிய திமுக செயலாளர் ராஜ்குமார், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர் பாஸ்கரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சீனிவாசன் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!