Perambalur: The wonders of the world are man-made; the natural wonder is the Sathanur fossil tree! Minister Sivasankar speaks to students!

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் கல்மரப்பூங்கா, காரை புதைபடிவ பூங்கா, பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள அம்மோனைட்ஸ் மையம், அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் உள்ள அருங்காட்சியகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை இணைக்கும் வகையில் செல்லக்கூடிய ஒரு நாள் கல்விச்சுற்றுலாவிற்கு, இன்று முதற்கட்டமாக மேலமாத்தூர், அசூர், ஒதியம், குன்னம் ஆண்கள், பெண்கள் உயர்நிலைப்பள்ளிகளில் 9 ஆம் வகுப்பு பயிலக்கூடிய 125 மாணவர்கள், 107 மாணவிகள் என மொத்தம் 232 மாணவ மாணவிகளை ஒரு நாள் கல்விச்சுற்றுலாவிற்கு அழைத்துச்செல்லப்பட்டனர்.
அதன்பின்னர், சாத்தனூர் கல்மரப்பூங்காவில் தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர், பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் உள்ள தொல்லியல் சார்ந்த சிறப்புகளையும், தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவால் காரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள புதைபடிவ பூங்கா மற்றும் வட்டாட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அம்மோனைட்ஸ் அருங்காட்சியங்களின் முக்கியத்துவத்தை மாணவர்களிடையே விளக்கினார்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தொல்லுயிர்களின் படிமங்களின் நமது பெரம்பலூர் அரியலூர் மாவட்டங்களில் கிடைப்பது குறித்து உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆய்வாளர்கள் ஆர்வமுடன் வந்து பார்வையிடுகின்றனர். நமது மண்ணின் முக்கியத்துவத்தை, வரலாற்றுத்தொண்மைகளை மாணவச் செல்வங்களாகிய நீங்களும் அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த கல்விச்சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 12 கோடி ஆண்டுகளுக்கு முன்பு கடலாக இருந்த இப்பகுதியில் பூக்கள் பூக்காத காலத்திய மரம் கல்லாக உருமாறி உள்ளதை பார்க்கிறோம். உலக அதிசயங்களாக கூறப்படும் எகிப்து மம்மி, பாபிலோன் தொங்கும் தோட்டம், பைசா நகரத்து சாய்ந்த கோபுரம், தாஜ்மஹால், சீனப்பெருஞ்சுவர், போன்றவை மனிதர்களால் செய்யப்பட்டவை. ஆனால், நமது, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் அமைந்துள்ள சாத்தனூர் கல்மரம், மற்றும் காரை, அரியலூர் பகுதிகளில் கிடைக்கப்பட்டுள்ள பல்வேறு உயிரினங்களின் புதைப்படிவங்களும், டைனோசர் முட்டைகள், அமோனைட்டுகள் காண்பதற்கு அரிதானவை, இங்கு கிடைத்துள்ளன. இவற்றை உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும் வந்து கண்டுகளித்தும், தொட்டும் உணர்ந்து பார்க்கின்றனர். பலர் ஆராய்ச்சிகளும் செய்கின்றனர். இந்த மண்ணிலே பிறந்த நாம் இதைப்பற்றி அறிந்து கொள்ளவே இந்த சுற்றுலா உங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்த அவர், கல்மரப்பூங்காவில் உள்ள அருங்காட்சியகத்தினையும், கல்மரத்தையும் மாணவ மாணவிகளுடன் பார்வையிட்டார்.
சிவசங்கர் அறக்கட்டளை மூலம் மாணவ மாணவிகளுக்கான குறிப்பேடு, பேனா, அந்தந்த பகுதிகள் குறித்த விளக்க துண்டு பிரசுரங்கள், மதிய உணவு உள்ளிட்டவை மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்டது. இதுபோன்ற அடுத்தடுத்து மற்ற பள்ளிகளுக்கும் ஒரு நாள் கல்வி சுற்றுலா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது,
இந்நிகழ்ச்சியில் தொல்லியல் வரலாற்று ஆய்வாளர் பிரசாத், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தொல்லுயிர் படிமங்கள் கிடைக்கும் பகுதிகள் குறித்தும் அவற்றின் முக்கியத்துவம் குறித்தும் மாணவ மாணவிகளுக்கு விரிவாக எடுத்துரைத்தார். கலெக்டர் ந.மிருணாளினி, ஆலத்தூர் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ந.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.










kaalaimalar2@gmail.com |
9003770497