Perambalur: Village-level WhatsApp groups to prevent child marriages; Collector provides information!

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட சாரண சாரணியர் இயக்க கூட்ட அரங்கில் மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் இல்லாத மாவட்டத்தை உருவாக்கிடும் வகையில், கிராம அளவிலான குழந்தை திருமண தடுப்பு குழு உறுப்பினர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி தலைமையில் இன்று (06.02.2026) நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த ஓராண்டில் பெரம்பலூர் ஒன்றியத்தில் கவுள்பாளையம், எறையூர், கல்பாடி, துறைமங்கலம், வடக்குமாதவி, பொம்மனப்பாடி ஆகிய கிராமங்களிலும், ஆலத்தூர் ஒன்றியத்தில் தெரணி, கொளக்காநத்தம், திம்மூர், நொச்சிக்குளம், மேலமாத்தூர் ஆகிய கிராமங்களிலும், வேப்பூர் ஒன்றியத்தில் பேரளி, பரவாய், பெரியவெண்மணி, பெருமத்தூர், கீழப்பெரம்பலூர் ஆகிய கிராமங்களிலும், வேப்பந்தட்டை வட்டத்தில் அரும்பாவூர், நூத்தப்பூர், நெய்க்குப்பை, தேவையூர், பசும்பலூர் ஆகிய கிராமங்களிலும் குழந்தை திருமணங்கள் நடைபெற்றுள்ளது. எனவே, குழந்தை திருமணத்தை தடுப்பதற்காக கலெக்டர் உத்தரவின் அடிப்படையில் மாவட்ட அளவிலான குழுக்கள், வட்டார அளவிலான குழுக்கள் மற்றும் கிராம அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அளவிலான குழு, வட்டார அளவிலான குழுக்களும், கிராம அளவிலான குழுக்களில் கிராம நிர்வாக அலுவலர், ஊராட்சி செயலர், பள்ளி தலைமை ஆசிரியர், கிராம சுகாதார செவிலியர், குழந்தைகள் மையபணியாளர், நியாய விலைக்கடை விற்பனையாளர், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடிக்கல்வி பணியாளர், தொண்டு நிறுவன ஊழியர்கள், மாவட்ட சமூக நல அலுவலக பணியாளர், குழந்தை பாதுகாப்பு அலகு பணியாளர் இடம் பெற்றுள்ளனர். இக்குழுவினரிடம் கலெக்டர் கலந்துரையாடினார்.

குழந்தைத் திருமணம் நடைபெறும் பட்சத்தில் குழந்தைத் திருமணத்தை நடத்தி வைப்போர், திருமணத்தில் கலந்துகொள்வோர், திருமணத்தை புகைப்படம் எடுப்பவர், திருமண பத்ரிக்கை அச்சிட்டவர், ஒலி,ஒளி அமைப்பவர், திருமண மண்டப உரிமையாளர், உள்ளிட்டோருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு, அனைத்து வீடுகளிலும் ஒட்டுவதற்கு குழந்தைத் திருமணம் தடுப்பு பற்றிய விழிப்புணர்வு சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் ஆகியவற்றை கலெக்டர் வழங்கினார். இத்தடுப்புக்குழுவின் மூலம் இதுவரை 2 குழந்தை திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

மாவட்ட சமூக நல அலுவலர் புவனேஸ்வரி, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெயஸ்ரீ, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் ராஜீவ்காந்தி, திட்ட ஒருங்கிணைப்பாளர் சமூக வளர்ச்சி திட்டம் பிரபு, மாவட்ட தாய் சேய் நல அலுவலர் சந்தியா, குழந்தை நல குழு உறுப்பினர் ரேவதி, மைய நிர்வாகி ஒருங்கிணைந்த சேவை மையம் கீதா மற்றும் அரசு அலுவலர்கள், தன்னார்வலர்கள், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Copyright 2015 - © 2026 — Kaalaimalar | MSME Reg.N0 : UDAYAM-TN-16_0000062 | . All Rights Reserved | kaalaimalar2@gmail.com | 9003770497

This function has been disabled for News - Kalaimalar.

error: Content is protected !!