Preliminary verification Internet service launch in Namakkal district; SP information
நாமக்கல் மாவட்ட போலீஸ் எஸ்பி அருளரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழக போலீஸ் துறையில் போலீஸ் முன்நடத்தை சரிபார்ப்பு சேவை என்ற ஒரு புதிய இன்டர்நெட் வழி சேவையினை தமிழக காவல் துறை அறிமுகப்படுத்தியுள்ளது. பொதுமக்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் இன்டர்நெட் மூலம் தனியார் விவரம் சரிபார்ப்பு,வேலை நிமித்தமான சரிபார்ப்பு,வாடகைதாரரின் விவரம் சரிபார்ப்பு,வீட்டு வேலையாட்கள் விவரம் சரிபார்ப்பு சேவைகளுக்காக விண்ணப்பிக்கலாம்.
மேற்படி சேவையினை பயன் படுத்துவதற்காக தனிநபர் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.500/- மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரு விண்ணப்பத்திற்கு ரூ.1000/- வீதமும் கட்டணம் செலுத்த வேண்டும். இன்டர்நெட் வழியாக கிரெடிட் கார்டு / டெபிட் கார்டு மற்றும் இன்டர்நெட் வங்கி சேவை ஆகிய முறைகளில் ஏதேனும் ஒரு முறையினைப் பயன்படுத்தி மேற்படி கட்டணத் தொகையினை செலுத்தலாம். காவல் முன் நடத்தை சரிபார்ப்பு சேவையின் முக்கிய நோக்கம் என்னவெனில், விவரம் சரிபார்க்கப்பட வேண்டிய தனிநபர் ஒருவரின் தற்பொழுதைய வீட்டு முகவரி மற்றும் தமிழக காவல் துறையின் வசம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் மேற்படி நபர் ஏதேனும் குற்ற நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளாரா என்ற விவரம் சரிபார்க்கப்படும்.
தமிழகத்தில் வசிப்பவர்கள் பற்றி விவரங்கள் சரிபார்க்கப்படும். விண்ணப்பம் பெறப்பட்ட 15 நாட்களுக்குள் போலீஸ் முன் நடத்தை சரிபார்ப்பு பணி முடிக்கப்படும். காவல் முன்நடத்தை சரிபார்ப்பு சேவைக்காக பொதுமக்கள் அல்லது தனியார் நிறுவனங்கள் போலீஸ் ஸ்டேசனுக்கோ நேரிடையாக செல்ல வேண்டிய அவசியமில்லை.
பொதுமக்கள் / தனியார் நிறுவனங்கள் காவல் சரிபார்ப்பு அறிக்கை பெறுவதற்க்காக இன்டர்நெட் வழியாக விண்ணப்பித்து அதற்கான அறிக்கையினை இன்டர்நெட்டில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம். மேலும் அந்த அறிக்கையின் நகல் ஒன்று விண்ணப்பதாரரின் இ-மெயில் முகவரிக்கும் அனுப்பி வைக்கப்படும். போலீஸ் சரிபார்ப்பு அறிக்கையிலுள்ள கியு.ஆர் குறியீட்டினை ஸ்கேன் செய்தும், அல்லது காவல் சாரிபார்ப்பு சேவையிலுள்ள “சரிபார்ப்பு”என்ற பகுதியின் மூலம் இதன் நம்பகத்தன்மையினை சரிபார்த்துக்கொள்ளலாம்.பிவிஆர் எண்ணைப் பயன்படுத்தி இன்டர்நெட் வழியாக விண்ணப்பதாரர் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறிந்து கொள்ளலாம். இச்சேவை சம்மந்தமாக வினாக்கள் மற்றும் அதற்கான விடைகளை எப்.ஏ.க்யு.எஸ்., தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இன்டர்நெட்டில் வெளியிடப்பட்டுள்ளது.
மேற்படி சேவையில் ஏதேனும் குறைகள் இருந்தால் அதுபற்றி போலீஸ் முன்நடத்தை சரிபார்ப்பு சேவையில் பின்னூட்டம் என்ற பகுதியினைப் பயன்படுத்தி விண்ணப்பதாரர் இன்டர்öந்ட வழியாக புகார் அளிக்கலாம். மேற்படி பின்னூட்டமானது சம்பந்தப்பட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் / மாநகர கமிஷனர் மற்றும் சென்னை மாநகர டி.சி11, ஐ.எஸ் ஆகியோரின் இ-மெயில் முகவரிக்கு தானியங்கி முறையில் உரிய நடவடிக்கைக்காக அனுப்பப்படும்.
இதுசம்மந்தமாக நாமக்கல் மாவட்டத்தில் மல்லசமுத்திரம் பகுதியைச் சேர்ந்த பழனிச்சாமி என்பரின் மகன் கிருஷ்ணனுக்கு போலீஸ் துறை நடத்தை சான்று இன்டர்நெட் மூலமாக பதிவு செய்ததை விசாரித்து மாதிரி சான்று வழங்கப்பட்டது. இன்டர்நெட் சான்று விண்ணப்பிக்கும்போது போலீஸ் ஸ்டேசனுக்கு சென்று நேரடியாக மனு கொடுக்கும் நேரம் மீதியாவதுடன் வங்கியில் பணம் செலுத்த செல்லும் நேரமும் மீதமாவதுடன் எளிதாக காவல் துறையிடமிருந்து சான்றிதழ் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும், விண்ணப்பத்தில் அளிக்கப்படும் விவரங்கள் மற்றும் ஆவணங்களில் குறைபாடுகள் இருந்தால் மேற்படி விண்ணப்பமானது நிராகரிக்கப்படும், அதற்காக செலுத்தப்பட்ட கட்டணத் தொகையும் திருப்பி அளிக்கப்படமாட்டாது. மேலும், போலீஸ் துறைக்கு தவறான விவரங்கள் அளிப்பது தண்டைக்குரிய குற்றமாகும் என தெரிவித்துள்ளார்.