Refusing to buy the body of the deceased near Perambalur, the relatives are protesting!
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள கை.களத்தூர் காந்தி நகரை சேர்ந்தவர் அங்கமுத்து. இவர் அங்குள்ள மின்வாரிய அலுவலகத்தில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த 7 ந் தேதி இறந்த தனது மாமனார் உடலை அடக்கம் செய்துவிட்டு காந்தி நகர் அருகே சாலையில் நடந்து வந்து கொண்டிருந்தபோது அந்த வழியாக வேகமாக வந்த கார் ஒன்று அங்கமுத்து மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. அதில் அங்கமுத்து படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக கை.களத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு நிற்காமல் சென்ற கார் யாருடையது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இன்று அங்கமுத்துவின் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு காந்திநகர் ரேஷன் கடை அருகே பில்லங்குளம்- வேப்பந்தட்டை சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது கார் ஓட்டி வந்து விபத்தை ஏற்படுத்தியவர் யார் என கண்டறிந்து உடனே கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மங்களமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன், வேப்பந்தட்டை தாசில்தார் துரைராஜ் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது விரைவில் குற்றவாளியை கண்டுபிடித்து கைது செய்து விடுவதாக உறுதி அளித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் பில்லங்குளம்- வேப்பந்தட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.